வலி வடக்கில் குடியிருப்பு காணியை அபகரிக்கும் முயற்சி தோற்கடித்த தமிழ் மக்கள்: பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்

OruvanOruvan

The Tamil people defeated the attempt to expropriate their residential land

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், முன்னர் விடுவிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சி நேற்று பிரதேசச மக்களால் தடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் மக்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ள பிரதேசத்தில் இருந்து
விமான நிலைய அபிவிருத்திக்கு 500 ஏக்கர் காணியை சுவீகரித்துத் தருமாறு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றினர்.

இந்த காணி அளவீட்டுக்கு எதிர்ப்பை வெளியிட்டு அவசர சந்திப்புக்கு இந்த மாத ஆரம்பத்தில் மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்தபோதிலும், அவர் இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்ததாகவும் பிராந்திய ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 500 ஏக்கரை சுவீகரிக்கும் வகையில் அளவீட்டுப் பணிகளை பிரதேச நில அளவீட்டுப் பணியாளர்கள் முயற்சித்துள்ளனர்.

தமக்கு அறிவிக்காது இரகசியமான முறையில் காணி அளவிடும் முயற்சி இடம்பெறுவதாக அறிந்து அப்பகுதியில் குவிந்த மக்கள் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மக்களின் எதிர்ப்பையடுத்து, காணி அளவீட்டை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.

வலிகாமம் வடக்கில், முன்னர் விடுவிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனவரி 31ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்திருந்தார்.

“வலி வடக்கில் இன்னும் 3000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கென போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதியும் இதனை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக குரும்பசிட்டி, கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய பிரதேசங்களில் மேலும் 500 பரப்புகளை எடுக்க அளவீட்டுத் திணைக்களம் முயற்சிக்கிறது.”

ஜனவரி 30ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, இந்த காணியை சுவீகரிக்கும் முயற்சி தொடர்பில் பிரதேச சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, அதுத் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.