தயாசிறிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Short Story 12.02.2024

தயாசிறிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேனவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதுடன், வழக்கும் தொடரப்பட்டது.

சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

சுகாதார சேவையை அத்தியாவசியமான பொது சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க செவ்வாய்க்கிழமை (பெப்.13) இந்த அறிக்கையை வெளியிட்டார்.1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு கோரி சத்தியாக்கிரகப் போராட்டம்

காட்டு யானைகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மகாவிலச்சி விவசாயிகள் குழுவொன்று இன்று முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாளாந்தம் சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கைதிகளின் எண்ணிக்கை

நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாளாந்தம் சுமார் 400 பேர் சிறைகளுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.இதுவரையில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

டயானா கமகேவின் எம்.பி. பதவி; தீர்ப்பை காலவரையின்றி ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற தகுதிகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையை உயர் நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளதுடன், தீர்மானத்தை அறிவிப்பது காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது.

1,200 க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் வைத்தியசாலைகளில்

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக 1,200 க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் சேவைகளைப் பேணுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர் - இராணுவப் பேச்சாளர்

OruvanOruvan

Tri Forces personnel deployed to hospitals

ஆசியாவின் நட்பு நாடுகளுள் இலங்கைக்கு 15வது இடம்

சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை நட்பு நாடாக திகழும் காரணத்தினால் ஆசியாவின் நட்பு நாடுகளுள் 15வது இடத்தை பெற்றுள்ளதாக yahoo Finance இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலை நோயாளிகள் அவதி

கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு செயலிழந்துள்ளதாக சுகாதாத தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தரமவிக்தர தெரிவித்தார். தற்போது 8000 நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், ஒரு பிரிவு தற்காலிகமாக செயலிழந்துள்ளதால் நோயாளிகள் அவதியுறுவதாக அவர் மேலும தெரிவித்தார்.

அட்டலுகமவில் சிறுமியை கொலை செய்த நபருக்கு 27 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

களுத்துறை அட்டலுகம பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 9 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தும் நோக்கில் கடத்திச் சென்று சேற்றில் அமிழ்த்தி கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பாஃருக் மொஹமட் கணேசநாதன் என்ற குற்றவாளிளுக்கு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இன்று 27 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன் கொல்லப்பட்ட சிறுமியின் தாயாருக்கு 30 லட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கைக்கு கௌரவிப்பு

நாட்டில் காணப்படும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை பாராட்டி ஐக்கிய நாடுகள் சபையால் விருது வழங்கி கெளரவிக்கபட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படும்-ஜனாதிபதி செயலகம்

நடத்த வேண்டிய உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டும், பொதுத் தேர்தல் அடுத்தாண்டும் நடைபெறும் என்பதுடன் அதற்கு தேவையான நிதி வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

பாடசாலை கல்வித் திட்டத்தில் AI பாடநெறி

தரம் 08 முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது -அரசாங்க தகவல் திணைக்களம்

சாந்தனை தாயகத்திற்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், தாயகம் திரும்புவது தொடர்பான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.தாயகம் திரும்ப உத்தரவிடக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

தெற்கில் உருவாகும் புதிய தேசியவாத கூட்டணி

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான நடந்து வரும் முக்கியமான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவு செய்து, புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் இந்த கூட்டணியில் தேசியவாத கட்சிகள் உட்பட அமைப்புகள் அங்கம் வகிக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (13) தெரிவித்துள்ளார்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ பிடித்து எரிந்துள்ளது

பாணந்துறை வாத்துவ, பொத்துபிட்டிய பிரதேசத்தில் காலி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று பிற்பகல் இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதுடன் களுத்துறை நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை கடவுச்சீட்டு அலுவலகம் அருகில் பதற்றம்

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இன்று காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதால் இன்று செவ்வாய்க்கிழமை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இலங்கையில் ஏப்ரல் நடுப்பகுதிவரை மழையை எதிர்பார்க்க முடியாது

இலங்கையில் ஏப்ரல் நடுப்பகுதியிலேயே மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் திருத்தம் ; அமைச்சரவை அனுமதி

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்காக அமைச்சரவையில் நேற்று திங்கட்கிழமை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் மீண்டும் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று மீண்டும் முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் இராஜினாமா

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி மனோஜ் கமகே, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்று (13) முதல் இந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காய சாகுபடிக்கு இலவச காப்பீடு வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்

வெங்காய சாகுபடியில் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இலவச காப்பீடு வழங்க விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸாருக்கு சம்பள உயர்வு

வருமான வரி மற்றும் இதர வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

ரயிலில் மோதுண்டு இறந்தவரின் உடலை மீட்ட பொலிஸார்

ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் உடல், பேருவளை-மக்கொன ரயில் பாலத்தில், தண்டவாளங்களுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில், இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் 75 முதல் 80 வயதுக்கு இடைப்பட்ட நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வளர்ப்பு நாய்க்கு தீ வைத்தவர் கைது

கம்பஹா, இம்புல்கொடவில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

2024க்கான புதிய ஹஜ் குழு நியமனம்

2024 ஆம் ஆண்டுக்கான புதிய ஹஜ்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. பௌத்த சாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்காக நியமிக்கப்பட்ட ஹஜ் குழுவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய ஹஜ் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீகொட மொத்த பொருளாதார சந்தையில் துப்பாக்கிச்சூடு - வியாபார நடவடிக்கைகள் நிறுத்தம்

மீகொட மொத்த பொருளாதார சந்தையில் அதிகாலை சேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யுவதி ஒருவர் படுகாமடைந்துள்ளார். இதனையடுத்து மீகொட மொத்த பொருளாதார சந்தை வியாபாரிகள் உரிய பாதுகாப்பு கோரி வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர்.

டயானா கமகேவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது

சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகர் மீது தாக்குதல்

மரமொன்றின் மறைவில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீது சக பொலிஸ் அதிகாரிகள் கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்

சுகாதாரதுறை சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

நாட்டிலுள்ள 72 சுகாதாரதுறை சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் பெண்களும் ஆர்வம்

பொலிஸாரின் புதிய புள்ளிவிபரங்களின் பிரகாரம், போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டு, இணைந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரணில் - சஜித் இணைந்து அரசியல் செய்வது சாத்தியமற்ற விடயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து அரசியல் செய்வது சாத்தியமற்ற விடயம் என்று பழனி திகாம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.