கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் 8000 பேர் பங்கேற்பர்: தேவையான உணவை எடுத்து வர வேண்டும் எனவும் அறிவிப்பு

OruvanOruvan

St. Anthony's Church in Kachchathivu

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் இம்முறை இலங்கையை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மாத்திரமே கலந்துக்கொள்ள உள்ளதாகவும் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படாது என்பதால், தேவையான உணவுகளை எடுத்து வருமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழ் குறிக்கட்டுவான் படகுத்துறையில் இருந்து திருவிழாவில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கான படகு சேவைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி அதிகாலை 5 முதல் மதியம் 12 மணி வரை நடத்தப்படும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை பயணிக்க ஒருவரிடம் 150 ரூபா அறவிடப்படும்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து குறிக்கட்டுவான் படகுத்துறை வரை பயணிக்க 100 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகள் இயக்கப்படும்.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழாவில், 4 ஆயிரம் இலங்கையர்கள் மற்றும் 4 ஆயிரம் இந்தியர்கள் என 8 ஆயிரம் பேர் வரை மாத்திரமே கலந்துக்கொள்வார்கள்.

திருவிழா முடிவடைந்த பின்னர், அதில் கலந்துக்கொண்ட பத்தர்கள் அனைவரும் 24 ஆம் திகதி மதியம் 12 மணிக்குள் கச்சத்தீவில் இருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா என்பது சிறப்பு திருப்பலி பூஜை என்பதால், அதில் கலந்துக்கொள்பவர்கள் மதுபானம் அருந்தி இருக்கக்கூடாது என்பதுடன் மதுபானங்களை எடுத்து வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம் யாழ் மறைமாவட்டத்திற்குரிய தேவலாயம் என்பது குறிப்பிடத்தக்கது.