மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு(காணொளி): ஊடகவியலாளர்கள் கடும் எதிர்ப்பு; தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகின்றனர்

OruvanOruvan

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அரசாங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் அனுமதிகக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வருகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

“ஒரு சில ஊடகவியலாளர்களைப் பழிவாங்கும் நோக்குடன் இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் ஊடக தணிக்கை ஏன்? மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரால் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுகிறோம்” என எதிர்ப்பை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ச.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியதுடன், மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வினை முன்வைப்பதாகத் தெரிவித்தனர்.

இதேபோன்று முன்னரும் ஊடகவியாளர்களுக்கு இவ்வாறான மறுப்பு இடம்பெற்று ஊடகவியலாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.