அலி சப்ரி ரஹீம் எம்.பியின் கார் விபத்து: ஒருவர் காயம்
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 15 வது மைல் போஸ்ட்டுக்கு அருகில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் அளுத்கம மேல் புளியங்குளத்தை சேர்ந்த எச்.எம். ஹர்ஷன பிரதீப் என்பவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த போது, பாராளுமன்ற உறுப்பினரின் கார் அதே திசையில் சென்ற கை உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த கை உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்ற நபரே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.