ஜே.வி.பிக்கு இந்தியாவில் 300 கோடி பரிசு: சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார் தேரர்

OruvanOruvan

Anura Kumara Dissanayake and Jaishankar

தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பி இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் இலங்கையில் பல்வேறு சர்ச்சைகளும் அரசியல் அதிர்வலைகளும் ஏற்பட்டுள்ளன.

உள்நாட்டில் அதிகரித்துள்ள மக்கள் ஆதரவால் அடுத்துவரும் தேர்தல்களில் ஒரு தீர்மானமிக்க அரசியல் சக்தியாக ஜே.வி.பி உருவெடுக்கும் என்பதை முன்னதாக கணித்ததன் காரணமாகவே இந்தியா, ஜே.வி.பியை அழைத்து கலந்துரையாடியாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியம்

ஜே.வி.பியின் இந்திய பயணம் அக்கட்சிக்கு சர்வதேச ரீதியில் மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய அநுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில், ”இலங்கையில் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதை புதுடில்லி உணர்ந்துள்ளது.

எம்மீது இந்தியா கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு இந்தப் பயணம் சிறந்த பதிலை அளித்திருக்கும். இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்தியாவுக்கு அடிப்பணிந்து செயல்படுவோம் என்பதல்ல அர்த்தம்.

இந்தியா எமக்கு அருகில் உள்ள பலமான நாடு என்பதால் விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவுடன் இணைந்து பயணியாற்றும் தேவை எமக்கு உள்ளது.” என்றார்.

300 கிடைத்ததா?

இந்த நிலையில் ஜே.வி.பியின் இந்திய பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர்,

அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட சிவப்பு சகோதரர்களுக்கு 300 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த பணம் தேர்தலுக்கு செலவு செய்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து சிவப்பு சகோதரர்கள் வெளிப்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் இந்திய பயணம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துவரும் பின்புலத்தில் அக்கட்சி இலங்கை முழுவதும் தீவிர பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு இந்த பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.