தமிழரசுக் கட்சிக்குள் இணக்கப்பாடு: கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு - வன்னியில் எட்டப்பட்ட உடன்பாடு
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடைபெறவுள்ளது.
இதேவேளை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியானது முதல் ஒரு வருடத்திற்கு குகதாசனுக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் மாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் உட்பட நிர்வாகத் தெரிவு மத்திய குழுவில் இறுதி செய்யப்பட்டு பொதுச் சபையில் விடப்பட்ட வேளை பொதுச்செயலாளர் பதவியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வாக்கெடுப்பின் பின்னர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு தீர்வு எட்டும் வகையில் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் வவுனியாவில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.
நீண்ட நேரம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் திருகோணமலையைச் சேர்ந்த ச.குகதாசன் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீநேசனுக்குத் தலா ஒரு வருடம் பொதுச்செயலாளர் பதவியை வழங்கவும், அதன்படி முதலாவது வருடத்தை குகதாசனுக்கு வழங்குவது எனவும், இரண்டாவது வருடத்தை ஸ்ரீநேசனுக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 19ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.