டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீடு குறித்து விசாரணைகள் ஆரம்பம்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்து எழுத்தாணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று (12) மனுதாரர் தரப்பு வாதங்களை உயர் நீதிமன்றம் செவிமடுத்தது.
அதன்படி மனுதாரர் தரப்பு வாதங்கள் நேற்று நிறைவடைந்த நிலையில், பிரதிவாதி தரப்பு வாதங்களுக்காக மனுவானது இன்று (13) வரை ஒத்தி வைக்கப்பட்டது.
கெளரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனைக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேன் முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர தலைமையிலான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் முன் விசாரணை செய்யப்பட்டது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல லக்மால் ஹேரத் சார்பில் இந்த மேன் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் பிரதிவாதிகளாக டயானா கமகே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் இலுக்பிட்டிய மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 15 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மேன் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்ட போது மனு தாரர் சார்பில், ஹபீல் பாரிஸ், நிஷிக பொன்சேகா, சனோன் திலகரட்ன, ரஞ்சித் சமரசேகர, சஞ்ஜீவ கொடித்துவக்கு ஆகியோர் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனை பிரகாரம் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
பிரதிவாதி டயானா கமகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோவும், 4 ஆம் பிரதிவாதியான ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிமும் ஆஜராகினர்.
ஏனைய பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திஸ்னா வர்னகுல தலைமையிலான குழுவினர் ஆஜராகினர்.
இன்று மனுதாரர் தரப்பு வாதங்களின் போது, குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் பரவலான சந்தேகமும், அதிருப்தியும் முன்வைக்கப்பட்ட நிலையில், பிரதிவாதியின் சத்தியக் கடதாசியில் உள்ளடங்கிய விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் மன்றில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் இம்மனுவின் பிரதிவாதி தரப்பு வாதங்கள் நாளை முன் வைக்கப்படவுள்ளன.
BY: MFM.Fazeer