சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Short Story 12.02.2024

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பெற்றோலிய துறையில் இணைந்த அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Shell - RM Parks நிறுவனத்திற்கும், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கும் இடையில் எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தமொன்று இன்று (12) கொலன்னாவை, இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிலவும் வறட்சி காரணமாக அதிகரிக்கும் தோல் நோய் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக தண்ணீர் அல்லது திரவங்களை அருந்துவதனூடாக குழந்தைகளுக்கு நீரேற்றம் ஏற்படுவதுடன், குழந்தைகள் தினமும் இரு முறையாவது குளிக்குமாறும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை வெளியேற்றுமாறு கோரி தோட்ட மக்கள் போராட்டம்

ஹட்டன் திம்புல பத்தன, மேஃபீல்ட் தோட்டத்தில் 12 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 65,40 வயதான நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை தோட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறு தோட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தொழிலாளர்கள் தோட்டத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மக்கள் சக்தியை பிரதான எதிர்கட்சியாக மாறுவதற்கு முயற்சி

தேசிய மக்கள் சக்தி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாறுவதற்கு முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதை தாம் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. இந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறும்போது நாங்கள் அரசாங்கத்தில் இருப்போம்" என்றும் எஸ்.எம்.மரிக்கார் உறுதியளித்துள்ளார்.

மீண்டும் தொழிற்சங்க பணிபகிஷ்கரிப்பை ஆரம்பிக்கும் சுகாதார தொழிற்சங்கங்கள்

நாடளாவிய ரீதியில் மீண்டும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.30 முதல் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மன்னர் காலத்தில் தலதா பெரஹெரவில் பெண்கள் அரைநிர்வாணமாக சென்றனர்-லால்காந்த

விமலதர்மசூரிய மன்னரின் ஆட்சிக்காலத்தில் தலதா பெரஹெரவில் அழகிய பெண்கள் மேலாடை இன்றி அரைநிர்வாணமாக ஊர்வலத்தில் சென்றதாகவும் தற்போது விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு இவை தெரியாது எனவும் நாட்டில் பன்முகத்தன்மை இருக்க வேண்டும் என்பதுடன் அவை பற்றி பேச வேண்டும் எனவும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இந்தியாவை போல் ஜே.வி.பியினரை ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அழைக்க வேண்டும்

உலகில் பிரதான பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா அந்த நிலைமையை அடைய கடந்த சில தசாப்தற்ஙகளா மேற்கொண்ட மாற்றங்களை நேரடியாக அறிந்துக்கொள்ள ஜே.வி.பியினர் அந்த நாட்டுக்கு விஜயம் செய்தது மிக சிறந்தது எனவும் இந்தியா மட்டுமல்ல,ஜப்பான்,தென்கொரியா,சீனா ஆகிய நாடுகளும் அந்த கட்சியின் பிரதிநிதிகளை உடனடியாக தமது நாடுகளுக்கு அழைத்தால் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கிராண்டபாஸ் பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழு, கடமைக்காக செல்வதாக கூறி நேற்று பமுனுகம பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள தல்தியவத்தை பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது, பதுளை கோட்டேகொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

களனிவெளி பாதையை அதிவேக ரயில் பாதையாக மாற்ற திட்டம்

களனிவெளி ரயில் பாதையை அதிவேக ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த திட்டம் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட வீடமைப்பு வேலைத்திட்டங்கள் மீள் ஆரம்பம்

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகள் ஏற்கனவே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதல்;மாணவர்கள் நீதிமன்றில் முன்னிலை

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ஏழு மாணவர்களை இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாம் வருட மாணவர்கள் குழுவொன்று மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது காயமடைந்த மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

சக பெண் அதிகாரியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த கிராம அதிகாரி கைது

கல்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதான பெண் கிராம உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு சென்று அவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி கிராம நிர்வாக அதிகாரியை கைது செய்துள்ள கல்பிட்டி பொலிஸார், அவரை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா பறக்கும் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (12) இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய அரசின் விசேட அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதுடன், இந்திய விஜயத்தின் பின்னர் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதலை துண்டிக்க முயற்சித்த காதலனை கத்தியால் குத்திய யுவதி

பல வருடங்களாக இருந்து வந்த காதலை தொடர்பை துண்டித்துக்கொள்ள முயற்சித்த காதலனை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திய 19 வயதான யுவதியை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த யுவதி கம்பளை நகரில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் 22 வயதான இளைஞனை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.

ரயிலில் மோதுண்டு உயிரிழந்த 14 வயதான மாணவன்

கந்தளாய்,தம்பலகாமம், மொள்ளிப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவன் நேற்று மாலை மீன்பிடிக்க சென்ற போது, கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முட்டை விலை உயர்வு

முட்டை ஒன்றின் விலையை இன்று முதல் உயர்த்த அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும், சில்லறை விற்பனை விலை 63 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பு - இதுவரையில் 80 ஆயிரம் பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரையில் 80 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனது அரசியலை அழிக்க யாராலும் முடியாது! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தனது அரசியல் வாழ்வை யாராலும் அழிக்க முடியாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார். வீடுகளுக்கு தீ வைத்து, சொத்துக்களை அழித்து அச்சுறுத்தி எனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது எனவும், கம்பஹாவில் உள்ள மக்கள் நன்றியறிதல் கொண்டவர்கள். அவ்வாறானவர்கள் இருக்கும் வரை ஒரு அடியேனும் பின்வாங்க நான் தயாரில்லை என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஊதுபத்தி உற்பத்தி தொழிற்சாலையில் தீப்பரவல்

பன்னிப்பிட்டி - மஹல்வராவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஊதுபத்தி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பூசா சிறைச்சாலைக்குள்ளிருந்து தொலைபேசி உபகரணங்கள் மீட்பு

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைத்தொலைபேசிகள் உட்பட பல சாதனங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் கைப்பற்றியதாக தெரிவிக்கின்றன.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடையொன்றில் இன்று அதிகாலை துப்பாக்கி ஏந்திய இருவர் அங்கிருந்த காசாளரை சுட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான யுவதி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் செயலிழந்த பரிசோதனை கருவிகள்

நாட்டின் பல வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான கருவிகள் பழுதடைந்துள்ளமையினால் அன்றாட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத மின் இணைப்பில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு

கொஸ்கொட பிரதேசத்தில் வயல்வெளியில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் கார் மோதி விபத்து

குருவிட்டயில் இருந்து இரத்தினபுரி நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.