கலா மாஸ்டருக்கு மட்டும் ஏன் யாழ்ப்பாணத்தில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி?: “மானாட மயிலாட” நிகழ்ச்சியால் ஏற்பட்ட வெறுப்பு

OruvanOruvan

Funeral Poster For Kala Master

கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களை ஆக்கிரமித்த விடயம் என்றால், அது யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும், அதன்போது ஏற்பட்ட குழப்பங்களும்தான்.

இசை நிகழ்வு முடிந்துவிட்ட போதிலும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும், விவாதங்களும் இன்னும் முடிவடையவில்லை. ஆதரவாக ஒரு தரப்பினர்களும், எதிராக ஒரு தரப்பினர்களும் பரஸ்பரமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த குழப்பத்தின் உச்சகட்டமாக நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டருக்கு யாழ்ப்பாணத்தில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தன.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர் ஒருவரினால் யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் இந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், அப்போது நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வு நடத்த முடியாமல் போனதுடன், வேறொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, பெப்ரவரி 9ஆம் திகதி நிகழ்வை மீளவும் நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு நிகழ்வும் நடத்தப்பட்டதுடன், அதன்போது ஏற்பட்ட குழப்பங்களால் நிகழ்வு திடீரென இடைநிறுத்தப்பட்டது.

குஷ்புவின் வருகைக்கு கிளம்பிய எதிர்ப்புகள்

இந்த நிகழ்வுக்கான அறிவிப்பு வெளியானது முதல் பல சர்ச்சைகள் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக, இந்நிகழ்வுக்கு பிரபல நடிகை குஷ்பு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டதும் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதன் காரணமாக குஷ்புவுக்கு யாழில் எழுந்த கடும் எதிர்ப்புகள் காரணமாகவே தென்னிந்திய நடிகை குஷ்புவின் யாழ்ப்பாண விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு, தற்போதைய இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பில் இருந்த போது, புலி அமைப்பு மீதான தடை நீடிப்பு குறித்த கேள்விக்கு, ''அந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்'' என கருத்து கூறினார்.

இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே, குஷ்புவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு வடக்கு, கிழக்கு தமிழ் தாயகப் பகுதியில் கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் நடிகை குஷ்பு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

இதனால் குஷ்புவின் வருகை இரத்து செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி அழைக்கப்பட்டிருந்தார்.

புகைப்படம் எடுக்க 30 ஆயிரம் ரூபாய்

இப்படியான சர்ச்சைகளுக்கு மத்தியில் இலவச இசை நிகழ்ச்சி என அறிவிப்பு வெளியாகி, பின்னர் விஐபி ரிக்கெட்டுகள் 30 ஆயிரம் ரூபா என கூறப்பட்டது. அத்துடன், தென்னிந்திய பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கும் 30 ஆயிரம் ரூபா என கூறப்பட்டது.

இது தமிழ் மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர், பலாலி விமான நிலையத்தில் வைத்து கூறிய கருத்துகள் தமிழ் மக்களை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

எனினும் அவர் கூறவந்த கருத்துகள் பிழையாக அர்த்தப்பட்டிருக்கலாம் என்ற ஆதரவு குரல்களும் எழுப்பப்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமூகமாகவே துவங்கியது. எனினும், பின்னர் சன நெரிசல் கூடியதால் குழப்பம் ஏற்பட்டது.

கணிக்கப்பட்டதை விட அதிகளவு மக்கள் கூடியதால் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்வு இடைநிறுத்த வேண்டி தேவை ஏற்பட்டது. அமைதி காக்கும்படி பலரும் கோரிக்கை விடுத்த போதிலும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக திட்டமிட்ட வகையிலேயே இந்த நிகழ்வு குழப்பப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

யாழ். மக்களை இலக்கு வைத்து தேவையற்ற விமர்சனங்கள்

நிகழ்வின் பின்னர் யாழ்ப்பாண மக்களை இலக்கு வைத்து தேவையற்ற விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் எழுதப்பட்டன, பேசப்படுகின்றன. இதற்கு பல தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டனர்.

ஒரு சிறிய தரப்பினர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த யாழ்ப்பாண மக்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பல்வேறு தரப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் நிகழ்வை ஒழுங்கு செய்த மற்றுமொரு பிரபலமான கலா மாஸ்டருக்கு மட்டும் யாழ்ப்பாணத்தில் கண்ணீர் அஞ்சலி சுவரெட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியில் கலா மாஸ்டருக்கு மட்டும் ஏன் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

'மானாட மயிலாட' நிகழ்ச்சியால் ஏற்பட்ட வெறுப்பு

2009 தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தீவிரமடைந்திருந்த நிலையில் தமிழக மக்கள் எழுச்சியடைவதை தடுப்பதற்காக அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்தவரின் உறவினருக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' என்ற நிகழ்ச்சியை நடத்தியதாக கலா மாஸ்டர் மீது கடும் விமர்சனங்கள் உண்டு.

கலா மாஸ்டர் தமிழ் இனத்துரோகி என்ற குற்றச்சாட்டுகளும் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதன் வெளிப்பாடாகவே கலா மாஸ்டருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

'பிணக் குவியலின் மேல் மானாடி மயிலாடியவளே... இறந்த பெருச்சாளி கட்டுமரத்தின் கைக்கூலியே...' என்ற கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்த வாசகம் இதனை உறுதிப்படுத்துவதாக தமிழின சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவேளை, குஷ்பு யாழ்ப்பாணம் வந்திருந்தாலும் அவருக்கு இதைவிட மோசமான நிலை ஏற்பட்டிருக்கும் என தமிழ் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.