ஐ.தே.கட்சியிடம் சிறந்த திட்டங்கள் இருக்கின்றன: ரணிலின் ஆட்சியில் மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும்-ருவான் விஜேவர்தன

OruvanOruvan

Ruwan Wijewardena UNP Deputy leader

ஐக்கிய தேசியக்கட்சியிடம் சிறந்த திட்டங்கள் இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியின் கீழ் மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்களை காண முடியும் எனவும் அந்த கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு விரிவான நோக்கும் திறமையும் இருக்கின்றது. இதனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவரை மீண்டும் அந்த பதவிக்கு தெரிவு செய்ய நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

2024 ஆம் ஆண்டை தேர்தல் ஆண்டாக குறிப்பிடலாம். ஒக்டோபர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், நாம் அதற்கு தயாராக வேண்டியது அவசியம்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான வருடமாக நாங்கள் இந்த வருடத்தை கருதுகிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு எந்த இடத்தில் இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் வரிசைகளில் நின்றுக்கொண்டிருந்தோம்.வரிசைகளில் சிலர் இறந்தும் போயினர்.

அரச கருவூலத்தில் பணம் இருக்கவில்லை. வங்குரோத்து அடைந்த நாட்டை பொறுபேற்கும் தலைவர் ஒருவரை தேடிக்கொண்டிருக்கும் போது, தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சத்தமிடும் நபர்கள் தப்பியோடினர். எமது தலைவரான ரணில் விக்ரமசிங்க மட்டுமே நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்ப முன்வந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை எரித்து அவரை பயமுறுத்த முயற்சித்தனர். எனினும் அவர் நாட்டுக்காக மக்களை பற்றி சிந்தித்து தனக்கு எதிராக வேலை செய்த ஆளும் கட்சியினருடன் இணைந்து நாட்டை பொறுப்பேற்றார்.

அவர் நாட்டை பொறுப்பேற்றதன் காரணமாக நாடு வங்குரோத்து நிலைமையில் இருந்து மீண்டு,மக்களுக்கு தற்போது ஓரளவுக்கான நிவாரணங்கள் கிடைத்துள்ளன.

ரணில் விக்ரசிங்க என்பவர் தைரியமான தலைவர், முடிவுகளை எடுக்க அச்சப்பட மாட்டார்.அச்சமின்றி எந்த சவாலையும் எதிர்கொள்வார். இப்படியான தலைவரே எமக்கு தேவை.

நாடு தற்போது ஓரளவுக்கு சிறந்த நிலைமைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், நாங்கள் சரியாக செய்து காட்டுகிறோம் என எதிர்க்கட்சியினர் கூச்சலிடுகின்றனர். சவால்களை எதிர்கொள்ள முடியாது தப்பியோடியவர்கள் இப்படி கூச்சலிடுகின்றனர் எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.