அமெரிக்க - இந்திய அரசுகளின் மூலோபாயத்தில் இருந்து விலக்கப்பட்ட தமிழ்த்தேசிய கட்சிகள்?: பலமாக இருந்தால் வல்லரசுகள் அணுகும் என்பதற்கு ஜே.வி.பி. உதாரணம்

OruvanOruvan

பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென இந்தியாவில் தூதுவராக இருந்த மிலிந்த மொறகொட கூறிய கருத்தை இந்தியா ஏற்றுள்ளது போல் தெரிகிறது.

அனுரகுமார திஸாநாயக்காவை புதுடில்லிக்கு அழைத்துப் பேசியமை இதற்குச் சான்றாகவுள்ளது.

தூதுவராகப் பதவியேற்பதற்கு முன்னரும் பதவியில் இருந்து விலகி கொழும்புக்கு வந்த பின்னரும் பதின் மூன்றை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் மாகாண சபைகள் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் மிலிந்த மொறொகொட கூறியிருந்தார்.

இலங்கை அரசின் இறைமைக்குப் பாதிப்பில்லாத வகையில் இந்தியா இலங்கைத்தீவில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்ய முடியுமென அனுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் உறுதியளித்திருக்கிறார்.

சீனா பற்றிய பார்வை

அதேநேரம் சீனா பற்றிய ஜே.வி.பியின் பார்வையில் மாற்றமில்லை என்று ஜே.வி.பி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொழும்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கடந்த வாரம் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற வல்லரசுகளைச் சமாந்தரமாகக் கையாள வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க 2015 இல் பிரதமராக இருந்த போது நாடாளுமன்றத்தில் கூறிய கருத்தை ஏற்றுக்கும் தொனியில் விஜித ஹேரத்தும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் பலமிழந்து சிதறுண்டிருக்கும் சூழலில் ஜே.வி.பி. பலமடைந்துள்ளதை இந்தியா அவதானித்திருக்க வேண்டும் என்றும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறக்கூடும் என்ற ஒரு நம்பிக்கையிலும் இந்தியா அனுரகுமார திஸாநாயக்கவை அழைத்திருக்கலாம்.

அனுரகுமார திஸாநாயக்காவைச் சந்தித்த பின்னர் ஜெய்சங்கர் வெளியிட்ட கருத்தில் ஜே.வி.பிக்கு இலங்கைத்தீவில் மக்கள் செல்லவாக்கு அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுள்ளார்.

அதேவேளை, அனுரகுமார திஸாநாயக்க விரைவில் சீனாவுக்கும் பயனம் செய்வார் என்று ஜே.வி.பி. தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே, இலங்கைத்தீவை மையப்படுத்திய வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியல் பொருளாதார போட்டிச் சூழலை ஜே.வி.பி. நன்கு பயன்படுத்தி தமக்குரிய உள்ளூர் அரசியல் செல்வாக்கை குறிப்பாக வாக்கு வங்கியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது என்ற கருத்தும் உண்டு.

ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டாலும் இந்தியாவின் பொருளாதார உதவிகள் தேவைப்படும் என்ற நோக்கிலும் ஜே.வி.பி. புதுடில்லியுடன் உறவைப் பேண விரும்பியிருக்கவும் கூடும்.

இதனை இடதுசாரி சந்தர்ப்பவாதமாகவும் அவதானிக்கலாம்.

ஜே.வி.பியின் கணிப்பு

அதேநேரம், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா பெருமளவு அக்கறை செலுத்த விரும்பவில்லை என்பதையும் ஜே.வி.பி. அவதானித்திருப்பதைச் சமகால அணுகுமுறைகளும் வெளிப்படுத்துகின்றன.

பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நோக்கில் மிலிந்த மொறகொட புதுடில்லியில் தூதுவராக இருந்தபோது மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் ஜே.வி.பி. நன்கு அறிந்திருக்கிறது.

பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் கொழும்புக்கு வந்த மிலிந்த மொறகொட, அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்திருக்கிறார்.

அதேநேரம் சீனாவுடன் நெருங்கிச் செல்ல வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது கூறியதை எவரும் மறுப்பதற்கில்லை.

2009 மே மாதத்துடன் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என்ற தொனியிலேயே அமெரிக்கா இது வரைகாலமும் செயற்பட்டு வந்தது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

மிகச் சமீபகாலமாக இந்தோ – பசுபிக் பிராந்திய விகாரத்திலும் ரஷ்ய – உக்ரேன் போர் விடயத்திலும் இந்தியாவுடன் அமெரிக்கா பணிப்போரில் ஈடுபட்டு வருகின்றது.

ரஷ்ய – சீனாவை பிரதானப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பில் இந்தியாவின் செயற்பாடுகள் பற்றியும் அமெரிக்காவுக்கு உட்னபாடு இல்லை.

ஆனாலும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா முன்வைக்கும் பதின் மூன்றாவது திருத்தம் அல்லது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட்ட வேறு எந்த ஒரு அரசியல் தீர்வுக்கும் அமெரிக்கா முழுமையாக இணக்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவுடன் கலந்துபேசியே அமெரிக்கா இலங்கைத்தீவு விவகாரத்தைக் கையாளுகின்றது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

இப் பின்னணியில் ஜே.வி.பியை அமெரிக்க - இந்திய அரசுகள் அழைத்துப் பேசிய நகர்வுகள் மற்றும் இந்த வல்லரசுகளைப் பயன்படுத்தும் ஜே.வி.பியின் உத்திகள் எல்லாமே தற்போது மாறி வரும் உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்ற வியூகங்கள் என்பது புரிகிறது.

2009 இற்கும் பின்னரான நிலை

அதேவேளை, 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கைத்தீவில் ஒழுங்கான பலமான அரசாங்கம் அமையவில்லை என்பதே அமெரிக்காவின் பிரதான கவலை.

மாறாக ஈழத்தமிழர் விவகாத்துக்கான தீர்வு முயற்சிகள் அல்லது 2012 இல் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை பற்றிய பிரேரணைகள் எல்லாமே இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பைத் தங்களுக்குரியவாறு மாற்றியமைக்கும் காய் நகர்த்தல்களே தவிர வேறெதுவுமில்லை.

ஆனால், பலம் என்ற ஒன்று இருந்தால் எந்த ஒரு வல்லரசும் அழைத்துப் பேசும் என்பதற்குத் தற்போது ஜே.வி.பி. சிறந்த உதாரணம்.

2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் பலமிழந்து ஒருவருக்கொருவர் முரண்பட்டுத் தேர்தல் வியூகங்களுடன் மாத்திரம் இயங்கியதை அமெரிக்க - இந்திய அரசுகள் நன்கு அவதானித்திருக்கின்றன.

கூட்டுப் பொறுப்பு கூட்டுச் செயற்பாடு இல்லாத ஒரு பின்னணியில்தான் கொழும்புடன் மாத்திரம் பேசினால் போதும் எனவும் பலமுள்ள சிங்களக் கட்சிகளுடன் உறவை வளர்க்க வேண்டும் என்ற முடிவுக்கும் அமெரிக்க, இந்திய அரசுகள் வந்திருககின்றன.

வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளை மையமாகக் கொண்ட அரசியல் மூலோபாயங்களுக்காகவே அமெரிக்க - இந்திய அரசுகளும் மற்றும் சீனாவும் மும்முனைப் போட்டியாகச் செயற்படுகின்றன.

இந்த நகர்வுகளைச் சிங்களக் கட்சிகளும் இராஜதந்திர மொழியில் நன்கு பயன்படுத்துகின்றன. தற்போது ஜே.வி.பியும் இதற்கு விதிவிலக்கல்ல. அனுரகுமார திஸாநாயக்கவின் அமெரிக்க இந்திய பயணங்கள் நல்ல படிப்பினையான உதாரணமாகும்.

தமிழ்த்தேசியக் கட்சிகள் 2009 இற்குப் பின்னர் ஜனநாயக வழியில் தீவிரமாகச் செயற்பட்டிருந்தால் தற்போது குழம்பியிருக்கும் உலக அரசியல் சூழலுக்குள்ளும் மாறி வரவுள்ள உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்பவும் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாண்டிருக்க முடியும்.

இப்போதும் கூட அதற்கான புவிசார் அரசியல் பின்னணிகளும் அதற்குரிய வெளியும் தாராளமாக உண்டு.

பிரதம ஆசிரியர்