ஜே.வி.பியின் அன்றைய இந்திய எதிர்ப்பும்: தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நிலைப்பாடுகளும்

OruvanOruvan

Anura Kumara Dissanayake and JVP leaders

1980 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணி கொள்கை அறிக்கையில் செல்வந்த வகுப்பினரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என கூறப்பட்டிருந்தாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க, உலக அரசியல் இரு துருவங்கனளாக பிரிந்து இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கைகளை பிடித்து தொங்காது, தன்னை புதுப்பித்துக்கொள்ளுமாறு சஜித்திற்கு பதிலளித்திருந்தார்.

இந்தியாவுக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள அனுரகுமார திஸாநாயக்க, இந்திய பயணம் பற்றி கேட்கும் அரசியல்வாதிகளும் இந்த விதமாகவே பதிலளிக்கக்கூடும்.

மக்கள் விடுதலை முன்னணி 1972 ஆம் ஆண்டு முன்னர் முன்வைத்த இந்திய பரவல்வாதம் தொடர்பான நிலைப்பாடுகளை ஏனைய அரசியல்வாதிகள் நினைவூட்டி வருகின்றனர்.

எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணி என்பது இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ள அரசியல் கட்சி என்பது மக்கள் மத்தியிலும் பரவலாக காணப்படும் ஒரு எண்ணம் என்பதை அதன் தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது புரட்சியின் போது கொண்டிருந்த இந்திய பரவல்வாத எதிர்ப்பு கொள்கை மாத்திரம் இதற்கு காரணமில்லை. அவர்களின் இரண்டாவது புரட்சியின் ஒரு பகுதியாக தேசப்பற்றுள்ள மக்கள் அமைப்பு என்ற பெயரில் அப்போது இலங்கையில் நிலைக்கொண்டிருந்த இந்திய இராணுவத்திற்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்ததும் இதற்கு காரணம்.

இந்த நிலையில், இந்தியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்தியாவுக்கு சென்று அந்நாட்டின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து பிராந்தியத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை பற்றி பேச்சு நடத்தும் போது, கடந்த கால சம்பவங்கள் நினைவுக்கு வருவது நியாயமானது.

உண்மை நிலைமை என்னவென்றால், மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பம் முதலே இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. அதேபோல் ஏனைய பிரதான கட்சிகள் கடும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளில் இருந்தன.

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஆம் ஆண்டு புரட்சிக்கு முன்னர் தமது கட்சியில் இணையும் புதியவர்களுக்கு வகுப்பு என குறிப்பிடப்படும் 5 விரிவுரைகளை வழங்கியது. இதில் இரண்டாவது விரிவுரை இந்திய பரவல்வாத எதிர்ப்பு. இந்தியாவுக்கு எதிரான இந்த எதிர்ப்பு என்பதை மக்கள் விடுதலை முன்னணி முதலில் முன்வைத்த விடயமல்ல. இது 1960 ஆம் ஆண்டுகளில் சீனாவால் பிரசாரம் செய்யப்பட்ட நிலைப்பாடு. அன்றைய மக்கள் விடுதலை முன்னணி சீனாவுக்கு ஆதரவான கட்சியாக இருந்ததால், சீனாவின் அந்த கொள்கைகளை தனது புதிய ஆதரவாளர்களின் எண்ணத்தை மாற்றுவதற்காக பயன்படுத்தியது.

இது இனவாத கொள்கை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால், 1971 ஆம் ஆண்டு புரட்சி காரணமாக சிறைக்கு சென்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் மாவோயிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் ஆகிய கொள்கைகளுக்கு இடைப்பட்ட கொள்கையை நோக்கி உந்தப்பட்டதால், அவர்களின் 5 விரிவுரைகளில் இந்திய பரவல்வாத எதிர்ப்பு கொள்கை கைவிடப்பட்டது.

இதனால், இன்னும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இந்திய பரவல்வாதம் ஆகியவற்றுக்கு முடிச்சு போட முயற்சிப்போர், அனுரகுமார திஸாநாயக்க கூறுவதை போல் தம்மை புதுப்பித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய அமைதி காக்கும் படை"க்கு "குரங்கு இராணுவம்" என்று பெயர் சூட்டிய தேசபற்றுள்ள மக்கள் அமைப்பு, அவர்களை தாக்கிய கதையும் தற்போது செல்லுப்படியாகாது.

மக்கள் விடுதலை முன்னணி தனது இரண்டாவது புரட்சிக்கு முன்னர் அதாவது 1984 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

அது 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர், இந்திய அரசு இலங்கையை கண்டித்துக்கொண்டிருந்த நேரம்.

வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜேவீரவிடம் எடுத்த பேட்டியின் பிரதிகளை அந்த கட்சி 1984 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் விநியோகித்திருந்தது.

அன்றைய காலக்கட்டத்தில் பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவான இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தினால், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியாவை மூன்று முனைகளில் முற்றுகையிட உதவி வருவதாக ரோஹன விஜேவீர அந்த பேட்டியில் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் 1987 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மீது இந்திய-இலங்கை உடன்படிக்கையை திணித்தமை,அதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளாத மாகாண சபைகளை ஏற்படுத்தியமை,இந்தியா தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியமை ஆகியன காரணமாக அந்த கட்சி மீண்டும் இந்தியாவுக்கு எதிரியாக மாறியது. மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது புரட்சியின் போது நடந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் இந்திய இராணுவத்தை நோக்கியும் திரும்பியது.

எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் அந்த இரண்டாவது புரட்சியால் அந்த கட்சி மாத்திரமல்ல, அதன் அரசியல் சபையையும் அழிக்கப்பட்டது. உயிர் தப்பிய அரசியல் சபையின் ஒரே ஒரு உறுப்பினரான சோவன்ஸ அமரசிங்க, இந்தியா ஊடாக இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.

2000 ஆம் ஆண்டு சோமவன்ஸ அமரசிங்க, மீண்டும் நாடு திரும்பிய பின்னர் நடத்திய முதலாவது கூட்டத்தில் தான் உயிர் தப்ப உதவியமை சம்பந்தமாக 1989-90 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்த வி.பி.சிங்குக்கு நன்றி கூறியிருந்தார்.

இப்படியான பின்னணியிலேயே அனுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள், இந்திய தலைவர்களை சந்தித்துள்ளனர். இதனால், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த காலத்தில் இருந்து வந்த எதிர்ப்பு நிலைப்பாடுகள் தற்போதும் இருக்கின்றது என்பதை காணமுடியவில்லை.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய வருடத்தில், இந்திய அரசு, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தமையும் அந்த விஜயத்தில் இந்திய உயர் மட்ட அதிகாரிகள் அனுரகுமார உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமையும் மிகவும் முக்கியமான விடயம் கருதப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார செயலாளர் வினாய் மோஹன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பிரதான இந்திய அதிகாரிகளாவர்.

இது மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்த அவசரமாக அங்கீகாரம் அல்ல. கடந்த சில வருடங்களாக உருவாகி வந்த நிலைமைகளின் அடிப்படையில் கிடைத்த அங்கீகாரம்.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியானது அரசியல் நெருக்கடியாக வெடிதத்து, ஏற்பட்ட மக்கள் எழுச்சி இறுதியில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டால், பலர் தேசிய மக்கள் சக்தியை நோக்கி திரும்பினர். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் மக்கள் செல்வாக்கானது கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. அந்த காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் இதனை உறுதிப்படுத்தியிருந்தன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுகாதார கொள்கை நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்திக்கு 32 வீத வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 31 வீத வாக்குகளும் கிடைக்கும் தெரியவந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுக்கு 4 வீதமான வாக்குகளே கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தேசிய மக்கள் சக்திக்கு 39 வீத வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 27 வீத வாக்குகளும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 6 வீத வாக்குகளும்,பொதுஜன பெரமுனவுக்கு 10 வீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதே மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அனுரகுமார, சஜித் பிரேமதாச, ரணில் மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றின் வேட்பாளர்கள் முறையே, 50,33,9 மற்றும் 8 வீத வாக்குகளை பெறுவார்கள் என தெரியவந்தது. இந்த கருத்துக்கணிப்புகள் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டாலும் கருத்துக்கணிப்பு நடத்தும் விதத்தை எவரும் சவாலுக்கு உட்படுத்தவில்லை.

இதனால், சில முக்கியமான நாடுகள் மக்கள் விடுதலை முன்னணியுடன் கொடுக்கல்,வாங்கல்களை மேற்கொள்ள முயற்சித்ததை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.

போராட்டம் நடைபெற்ற காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க், கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள அந்த கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர்களை சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த நவம்பர் 17 ஆம் திகதி இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை சந்தித்தார். அத்துடன் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தின் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்தனர். ஜனவரி 23 ஆம் திகதி புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜனவரி 31 ஆம் திகதி ஜேர்மன் தூதுவர் ஃபீலிக்ஸ் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அடுத்த ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி என தேசிய மக்கள் சக்தியை காண்பதன் காரணமாகவே வெளிநாட்டுத் தூதுவர்கள் மத்தியில் அந்த கட்சிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கலாம். இலங்கையில் இந்த நாடுகளின் பல்வேறு அபிவிருத்திட்டங்கள் நடந்து வருகின்றன.

அவற்றை பாதுகாத்துக்கொள்ள இலங்கையின் எதிர்கால தலைவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்துக்கொண்டு, அவர்களுடன் சில கொடுக்கல், வாங்கல்களை முன்னெடுப்பது சிறந்தது என்பதே இதற்கு காரணம்.

மறுபுறம் அடுத்த தேர்தலில் தாம் ஆட்சி வருவோம் என மக்கள் விடுதலை முன்னணியினர் முழு நம்பிக்கையை கொண்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த காலங்களில் போராட்ட அமைப்பாகவும் பின்னர், ஆட்சிக்கு வர முடியாத கட்சியாக நடந்துக்கொண்டாலும் தற்போது அப்படி நடக்க முடியாது என்பதை மக்கள் விடுதலை முன்னணியினர் உணர்திருக்கலாம்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜிபக்ச இனவாதம் மற்றும் ஊழலை அடிப்படையாக கொண்டு வெளிநாடுகளுடன் செயற்பட்டதன் பிரதிபலன்களை கடந்த காலத்தில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது.

எது எப்படி இருந்த போதிலும் மாகாண சபை முறைமைக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே மிகப் பெரிய போராட்டங்களை நடத்தியது. எனினும் பிற்காலத்தில் இந்தியாவுடன் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ள அது அந்த கட்சிக்கு தடையாக இருக்கவில்லை.

அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவோம் என நினைக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி,இந்தியாவுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள நினைத்தாலும் எதிர்காலத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர எதிர்ப்பு நிலைமைகள் ஏற்படலாம்.

சம்பூர் அனல் மின் நிலையம், மன்னார் காற்றலை மின் உற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி, இந்திய அதிகாரிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளது.

வேறு நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்திக்கு இப்படியான பிரச்சினைகள் இருக்கின்றன.துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம், சீன உரக்கப்பல் போன்ற பிரச்சினைகள் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தி, சீனாவுடனும் எதிர்ப்பு நிலைப்பாடுகளையே கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்த பின்னரே இந்த விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கு இருக்கும் ராஜதந்திர திறமை மற்றும் திறமையின்மையை காணக்கூடியதாக இருக்கும். (லங்காதீப)