கோவை குண்டுவெடிப்பிற்கும், கொழும்பு குண்டுவெடிப்பிற்கும் தொடர்பா?: துப்புத் துலக்கும் என்.ஐ.ஏ, சஹ்ரானை பின்பற்றிய பலர் கைது

OruvanOruvan

கோவையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதானியாக செயற்பட்ட சஹ்ரான் ஹாசிமை பின்பற்றியுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புவைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கொல்லப்பட்டார்.

பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்க்கும் முயற்சி

கோவை குண்டு வெடிப்பு தொடர்பில் என்.ஐ.ஏ தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை, திருநொல்வேலி, திருச்சி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நால்வர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரபு மொழி கற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்க்கும் முயற்சி நடந்ததுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மெட்ராஸ் அரபிக் கல்லூரி மற்றும் கோவை அரபிக் கல்லூரிக்கு தொடர்புடைய 11 இடங்களில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டதாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கை ஒன்றையும் என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு

"அரபு வகுப்புகளை தவிர ஒன்லைன் வழியாகவும் பயங்கரவாத சித்தாந்தங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் கிலாபத் மற்றும் ஐஎஸ் சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்துள்ளனர்.

மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு விரோதமாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

2022 அக்டோபரில் நடந்த கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரும் கோவையில் உள்ள கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்திய இலங்கை தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிமை கோவையில் கைதானர்கள் பின்பற்றி வந்துள்ளனர்" என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.