சினிமா நட்சத்திரங்கள் இனிமேல் வரவேகூடாது என்ற நோக்கில் திட்டமிடப்பட்ட குழப்பமா?: யாழ் சம்பவம் சொல்லும் செய்தி, சமூக ஊடக அவதூறுகளின் பின்னணி

OruvanOruvan

தமிழ் நாட்டின் சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை திசை திருப்பி சினிமா மோகத்திற்குள் கொண்டு செல்லப்படும் சதித்திட்டம் என ஈழ தமிழர்கள் மத்தியில் பரவலான கருத்துகள் இருந்து வருகின்றன.

இப்பின்னணியிலேயே நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சி திட்டமிட்டு குழப்பப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ரசிகர்கள் என்ற போர்வையிலும், ரிக்கெட் கிடைக்கவில்லை என்ற அடிப்படையிலும் அங்கு கூடியிருந்த சில இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டு குழப்பியதாக கூறப்படுகின்றது.

இனிமேல் தமிழர் பகுதியில் இப்படியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற நோக்கில் திட்டமிட்டு தாக்கியதாகவும் அங்கிருந்த சிலர் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று வெள்ளிக்கழமை நடத்தப்பட்ட மாபெரும் இசைநிகழ்ச்சி இடை நடுவே ஏற்பட்ட குழப்பங்களால் நிறுத்தப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடிதடி, கைகலப்பு காரணமாக இசை நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டிருந்தது. புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இசை நிகழ்வு தொடர்பில் ஆரம்பம் முதல் சர்ச்சைகள் நீடித்திருந்தன.

புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஹரிஹரன், தென்னிந்திய நடிகர்கள் தமன்னா மற்றும் ரம்பா உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்ற இரவு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்திருந்தது.

சிலருக்கு ரிக்கெட் கிடைக்காததால், பல்வேறு கூரைகள் மற்றும் மரங்களில் ஏறி நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பார்வையாளர்கள், அந்த இடத்தில் போடப்பட்டிருந்த பொலிஸ் தடுப்புகளை உடைத்து, நிகழ்ச்சியின் கலைஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மேடைக்கு அருகில் வந்தனர்.

மக்களின் ஆவேசமான நடத்தையால் நிகழ்ச்சி நீண்ட நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்னும் சிலர் காணொளி பதிவு செய்வதற்காக கெமராக்களுக்காக கட்டப்பட்ட தளங்களில் ஏறியிருந்தமையையும் காணமுடிந்தது.

இந்நிகழ்வு இலவச இசை நிகழ்ச்சி என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர், விஐபி ரிக்கெட்டுகள் 30 ஆயிரம் ரூபா என பின்னர் அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்த புலம்பெயர் முதலீட்டார் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தில் தெரிவித்திருந்த கருத்தும் பலரிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் தென்னிந்திய பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு 30 ஆயிரம் என அறிவிக்கப்பட்டிருந்தமையும் பலத்த விமர்சனத்தைப் பெற்றிருந்தது.

அத்துடன், அறிவுள்ள தமிழ் சமூக ஒன்றை அறிவற்ற சமூகமாக உலகத்துக்கு காண்பிக்கும் வகையில் 30 ஆயிரம் ரூபா என்ற அறிவிப்பு பலருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று மாலை இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்ப்பார்க்கப்பட்டது போலவே மிகுந்த எண்ணிக்கையிலான மக்கள் வந்திருந்தனர். ஆரம்பத்தில் சுமூகமாக நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒரு கட்டத்தில் நெரிசலால் குழப்பம் ஏற்பட்டது.

இந்த குழப்பம் பின்னர் கைகலப்பாக மாறியதுடன், மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒழுங்கீனம் காரணமாகவே இந்த குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

போதிய ஒழுங்கள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன. நிகழ்வு ஏற்பாட்டாளர்களே இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என்ற கருத்துகளும் இப்போது வலுபெற்றுள்ளது.

இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் சமூக ஊடகங்களில் அது குறித்து புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியிடப்பட்டு மிகவும் அவதூறான கருத்துகள் வெளியிடப்படுகின்ற.

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் அங்கு வாழும் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் காணொளிகள் வெளிடப்படுகின்றன.

“யாழ் இளைஞர்களின் அட்டகாசம், யாழ் இளைஞர்களின் அராஜகம்” போன்ற தலைப்புகளில் காணொளி வெளியிட்டு வருவதாகவும், இதன் மூலம் யாழ்ப்பாண மக்களை அங்குள்ளவர்களே கொச்சைப்படுத்தி வருவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

ஒரு சிறிய குழுவினர் செய்த அசம்பாவிதங்களுக்கு ஒட்டு மொத்த யாழ்ப்பாண மக்களை குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற விமர்சனங்களும் உண்டு.

மேலும் இந்த இசை நிகழ்ச்சியை காண இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரும் திரளான மக்கள் வந்திருந்ததுடன் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட குழப்பதிற்கு யாழ்ப்பாண இளைஞர்களை மட்டும் குறிப்பிட்டு குற்றம் சுமத்துவது வருத்தமளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த இசை நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பில் ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. சமீப காலமாக தென்னிந்திய பிரபலங்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தும் போக்குகள் அதிகரித்து வருகின்றன.

இதனை கலாசார ஒழுங்கீனம் என்று குறிப்பிட்டு வரும் ஒரு தரப்பினர் இவ்வாறான நிகழ்வுகளுக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டு வந்தனர்.

அது போலவே நேற்று நடந்த இசை நிகழ்வுக்கும் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர். எனினும், கடந்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான நிகழ்வுகளில் எவ்வித குழப்பங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

மாறாக நேற்று இடம்பெற்ற நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் திட்டமிட்ட வகையில் குழப்படப்பட்டதாக நம்பப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது போன்ற சம்பவங்கள் அங்கு வரும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என ஆர்வளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.