அமைச்சர் டிரானுடன் நடந்த தொலைபேசி உரையாடல் யூடியூபில் பதிவேற்றம்: சந்தேக நபர் விளக்கமறியலில்

OruvanOruvan

Colombo Fort Magistrates Court

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை அனுமதியின்றி பதிவு செய்து, அந்த தொலைபேசி உரையாடலை யூடியூபில் பதிவேற்றம் செய்து, பொது பாதுகாப்புக்கு எதிராக தவறு செய்ய தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின் கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தொலைபேசி உரையாடலில் பதிவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, பொது அமைதியை சீர்குலைக்கும் விதமான குற்றத்தை செய்தமை மற்றும் சமூக பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தமை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக கூறி குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய சாமர தரிந்து மதுசங்க என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவுடன் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை நடத்தி வருகிறது.

விசாரணை முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களம், யூடியூப் சமூக ஊடகத்தில் தொலைபேசி உரையாடலை பதிவேற்றம் செய்து, பொது அமைதிக்கு எதிராக தவறு செய்ய தூண்டியமை சம்பந்தமாக சந்தேக நபரை கைது செய்ததாக கூறியுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சருடன் நடந்த தொலைபேசி உரையாடலை அனுமதியின்றி பதிவு செய்து, பதிவேற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களம், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பணித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதால், சமூக ஊடகங்களில் நடக்கும் குற்றங்கள் தொடர்பில் பொலிஸார் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.