போர் காலத்தில் தமிழ் இளைஞன் காணாமல் போன சம்பவம்: சரத் பொன்சேகா பொறுப்புக்கூற வேண்டும்-நீதிமன்றம்

OruvanOruvan

Former Army Chief Sarath Fonseka Getty Images

வடக்கு,கிழக்கில் போர் நடைபெற்ற காலத்தில் 18 வருடங்களுக்கு முன்னர் வவுனியா ஓமந்தையில் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவத்திற்கு இலங்கை இராணுவம் பொறுப்புக்கூற வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓமந்தை இராணுவ காவலரணில் படையினரின் பொறுப்பின் கீழ் இருந்த நிலையில், காணாமல் போன கந்தசாமி இளமாறன் என்பவர் சம்பந்தமான ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணை அண்மையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கின் தீர்ப்பை வழங்கிய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,கந்தசாமி இளமாறன் என்ற இளைஞன் காணாமல் போன சம்பவத்திற்கு அன்றைய ஓமந்தை பிரதேசத்திற்கான இராணுவ கட்டளை அதிகாரி, வன்னி பிராந்திய கட்டளை தளபதி மற்றும் அப்போதைய இராணுவ தளபதி ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என தீர்ப்பளித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு அந்த இளைஞன் காணாமல் போன சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்ததுடன் வன்னி பிராந்திய இராணுவ கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் டப்ளியூ.யு. பீ. எதிரிசிங்க கடமையாற்றினார்.

மேலும் வழக்கின் தீர்ப்பை வழங்கிய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி, இளைஞன் காணாமல் போனமை சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் காணாமல் போனதாக கூறப்படும் இளமாறன் என்ற இளைஞன் உயிருடன் இருப்பாரேயானால், எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முனனிலைப்படுத்துமாறும் நீதிபதி, இலங்கை இராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை செயற்படுத்தவில்லை என்றால், இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என அடையாள் காணப்பட்டுள்ள மூன்று இராணுவ அதிகாரிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் காணாமல் போன இளைஞனின் ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கந்தசாமி இளமாறன் என்ற இளைஞன் கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து ஓமந்தை இராணுவ காவலரணுக்கு சென்ற பின்னர் காணாமல் போனார்.

எது எப்படி இருந்த போதிலும் காணாமல் போன இளைஞனை தாம் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இல்லை என இராணுவம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

எனினும் அந்த இளைஞன் ஓமந்தை இராணுவ காவலரணுக்கு வந்தார் என்பது காவலரணில் வந்து செல்லும் நபர்களை பதிவு செய்யும் ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதார் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.