அனுரகுமாரவின் இந்திய விஜயத்தால் குழப்படைந்துள்ள அரசியல் அணிகள்: நிலைமைக்கு ஏற்ப மாறுவதே அரசியல்-ஹரின் அமரசூரிய

OruvanOruvan

Dr Harini Amarasuriya MP

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு மேற்கொண்டுள்ள விஜயம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த சில அரசியல் அணிகள் குழப்பமடைந்திருப்பது குறித்து ஆச்சரியப்படவில்லை எனவும் இது இந்திய அரசின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ராஜதந்திர பயணமே அன்றி ஜனாதிபதியோ அல்லது வேறு நபர்களின் தலையீட்டில் கிடைத்த சிறப்புரிமையோ அல்ல எனவும் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அந்த கட்சியின் பிரதிநிதிகளின் இந்திய விஜயம் தொடர்பாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள வாதவிவாதங்கள் சம்பந்தமாக தெளிவுப்படுத்தி உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமது தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட எமது அணியினர் இந்திய அரசின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு மேற்கொண்டுள்ள விஜயம் தொடர்பாக அரசாங்கம் மற்றும் ஏனைய தரப்பினர் மத்திய மிகப் பெரிய வாத விவதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான இந்த விஜயமானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் நடந்தது எனக்கூற சிலர் முயற்சித்து வருகின்றனர். ஜனாதிபதியின் தலையீட்டில் இது நடக்கவில்லை. இது இந்தய அரசாங்கம், தேசிய மக்கள் கட்சிக்கு விடுத்த அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள விஜயம்.

பல தரப்பினர் இது குறித்து குழப்பமடைந்திருப்பது எமக்கு புரிகின்றது. இந்தியாவின் இந்த ராஜதந்திர அழைப்பானது இவர்களின் அதிகார திட்டங்கள் மற்றும் அரசியலுக்கு பெரும் சவால் என்பது இரகசியமான விடயமல்ல.

தேசிய மக்கள் சக்திக்கான சர்வதேச அங்கீகாரம் மற்றும் கட்சியின் சர்வதேச கொடுக்கல், வாங்கல்கள் இந்த விஜயத்தின் ஊடாக பலமடையும் என்பது இரகசியமல்ல. இது தொடர்பாக எமது எதிரணியினர் குழப்பமடைவது பற்றி நாங்கள் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

பல்வேறு கதைகளை கூறி இதனை தரம் தாழ்த்த முயற்சிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி என்பது மாறிவரும் உலக நிலைமைகளுடன், அவற்றை புரிந்துக்கொண்டு, அவற்றில் தலையீடுகளை மேற்கொள்ளக்கூடியது அரசியல் அமைப்பு என்பதை கூற வேண்டியது அவசியம்.

உங்களால் கடந்த கொள்கைகள் செயற்பாடுகளில் இருந்து விடுப்பட முடியாமல் இருக்கலாம். எனினும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு அரசியல் அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம்.

எமது நாடு மற்றும் எமது மக்களின் தேவைகளுக்காக நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச தொடர்புகளுக்குள் எமது கொள்கைகளுக்காக குரல் கொடுக்க எந்த வகையிலும் அஞ்சப் போவதில்லை.

தேவையான இடங்களில் இருக்கும் நிலைமைக்கு அமைய மாறுவதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். காரணம் அதுதான் அரசியல் என்பது எனவும் ஹரின் அமரசூரிய மேலும் கூறியுள்ளார்.