அச்சு ஊடகதுறை வரலாற்றில் புதிய அத்தியாயம்: நாளை முதல் "மொனரா" வார பத்திரிகை

OruvanOruvan

இலங்கை அச்சு ஊடகத்துறை வரலாற்றில் புதிய அடையாளங்களை பதித்து, எழுத்துக் கலையின் அத்தியாயத்தைக் குறிக்கும் "மொனரா" சிங்கள வார பத்திரிகை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் வாசகர்களின் கைகளில் தவழ உள்ளது.

குரலற்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மிக உயர்ந்த மதிப்பை இலங்கைத் தீவில் முன்வைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராகியுள்ளன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழல், அரசியல் கட்சிகள் இடையேயான குழப்பங்கள், பலவீனங்கள் குறிப்பாக பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் பிளவுப்பட்டுள்ள அரசியல் சூழலில் இப்பத்திரிகை வெளிவருகின்றது.

பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை மீள ஏற்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வாசகர்களின் கைகளுக்கு "மொனரா" சிங்கள தேசிய பத்திரிகை 6 பாகங்களும் 76 பக்கங்களுடனும் வெளிவருகின்றது.

Ben Holdings குழுமத்தின் கீழ் “அபே ஜனஹண்ட பப்ளிகேஷன்ஸ்” என்ற அச்சு ஊடக அமையம் ஊடாக “மொனரா“ என்ற இந்த சிங்கள வார இறுதி பத்திரிகை வெளியிடப்படுகின்றது.

அதற்கமைய நாளை முதல் கொழும்பு, கம்பஹா, நீர்கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மொனரா பத்திரிகையை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை பத்திரிக்கை துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் இந்த “மொனரா” பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மொனாரா வார பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆரியநந்த தொபகாவத்த கருத்து வெளியிடுகையில்,

“தற்போதையை சூழலில் மிகவும் சவால் மிக்க பணியையே ஏற்றுள்ளோம், இலங்கையில் பத்திரிகை துறை மிகவும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆகையினால் இது எங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.

அதற்காக எங்களிடம் மிகவும் சிறந்த குழுவொன்று இருக்கின்றது. தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்த ஊடகம் செயற்படாது, மக்களுக்காக நேர்மையுடன் சுயாதீனமாக செயல்படும்.” என அவர் விளக்கமளித்துள்ளார்.