டில்லிக்கும் கொழும்புக்கும் புதிய உறவை கட்டியெழுப்பும் சந்தோஷ் ஜா: சீனாவின் பிரசன்னத்தை குறைக்க இந்தியா வகுக்கும் புதிய வியூகம்

OruvanOruvan

இலங்கைத் தீவில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் தலையீடுகள் அதிகமாக இருக்கும் என்றும் புதுடில்லிக்கு ஆதரவான ஓர் அரசாங்கத்தை கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தெரிய வருகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கைத் தீவில் ஏற்பட்ட சீனாவுக்கு ஆதரவான போக்குகள் இந்தியாவின் அரசியல் நலன்களை பாதிக்கும் வகையில் அமைந்திருத்திருந்ததுடன், சீனாவின் பிரசன்னமும் இந்தியா எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சிக்கண்டிருந்தது.

சந்தோஷ் ஜாவின் சத்திரசிகிச்சை

பூகோள அரசியலில் இந்தியா அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் இலங்கையில் அமையும் எதிர்கால அரசாங்கங்களின் பங்களிப்பும் அவசிமாக உள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாத வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இந்தியா அதன் முதலீடுகளை அதிகரித்து வருகிறது.

திருகோணமலை துறைமுகம், எண்ணெய் குதங்களின் அபிவிருத்தி, மன்னாரில் புதிய காற்றாளைத் திட்டம், பலாலி விமான நிலையத்தை நவீன மயப்படுத்தல், நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை, கொச்சி - திருகோணமலை இடையிலான மின் பரிமாற்றத்திட்டம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி உட்பட பரந்தப்பட்ட அளவிலான முதலீடுகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் அடுத்து அமைய உள்ள அரசாங்கத்தை தமதுக்கு ஆதரவான அரசாங்கமாக மாற்றிக்கொள்ளும் தேவையின் பிரகாரமே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக சந்தேஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஆளுங்கட்சியை போன்று எதிர்க்கட்சிகளுடனும் வலுவான உறவுப்பாலத்தை உருவாக்கும் பொறுப்பு இவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, இலங்கைத் தீவுக்கு வருகை தந்து குறுகிய காலத்துக்ளேயே இராஜதந்திர மட்டத்தில் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பணியில் முக்கிய பங்கை சந்தோஷ் ஜா வகித்துள்ளார்.

வாய்ப்பை தவறவிட்ட சஜித்

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை டில்லிக்கு அழைத்து செல்வது சந்தோஷ் ஜாவின் நோக்கமாக இருந்துள்ளது.

இதன்படி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பை முதலில் பெற்றுக்கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதான்.

ஆனால், கடந்த சில வாரங்களாக “பிரபஞ்சம்“ திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பயணத்துக்கான திகதிகளை ஒதுக்க சஜித்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

குறித்த நிகழ்ச்சிகளை இரத்து செய்ய முடியாது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சஜித் தெரியப்படுத்தியுள்ளார்.

சஜித்தை தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் புதுடில்லிக்கு அழைத்துச் செல்ல இந்திய உயர்ஸ்தானிகராலம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த கோரிக்கையின் பிரகாரம் பெப்ரவரி 16ஆம் திகதி மைத்திரிபால இந்தியா செல்ல திகதியை வழங்கியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, அதிகாரப்பூர்வ பயணமாக எதிர்வரும் 13ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார். 13, 14, 15ஆம் திகதிகளில் வாஷிங்டனில் தங்கியிருக்கும் அவர் அங்கிருந்து 16ஆம் திகதி இந்திய தலைநகர் புதுடில்லி செல்ல உள்ளார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உரிய திகதியை வழங்காமையின் காரணமாகவே, அதற்கு முன்னதாக ஜே.வி.பியை இந்தியா டில்லிக்கு அழைத்துள்ளது.

ரகசியத்தை பேணிய அநுர

இந்திய பயணத்துக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர், ஜே.வி.பி. இந்திய அதிகாரிகளை சந்திக்கும் செய்திகள் வெளியானால் இலங்கைத் தீவில் சில, எதிர்மறையான கருத்துகள் உருவாகும் எனக் கருதி பயணத்தின் ரகசியத் தன்மையை பேணுமாறு உயர்ஸ்தானிகராலயத்துக்கு அநுர கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, ஜே.வி.பி. இந்தியா செல்வதற்காக விமானம் ஏறும் வரை, சம்பந்தப்பட்ட விடயத்தை உயர்ஸ்தானிகராலயம் ரகசியமாக பேணியுள்ளது.

அநுர மற்றும் குழுவினர் புதுடில்லியில் தரையிறங்கிய பின்னரே இந்திய பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதன்படி, குறித்த அறிவிப்பையும் வெளியிட்டனர்.

டில்லியின் எதிர்பார்ப்பு என்ன?

ஜே.வி.பி எதிர்பார்த்தது போன்று இந்த பயணம் இலங்கைத் தீவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சிகள் ஜே.வி.பிக்கு இந்தியா வழங்கியுள்ள முக்கியத்துவத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும் இந்தியாவின் அழைப்பை கண்டுகொள்ளாது விட்டமை குறித்து கவலையடைந்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் டில்லியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் அரசாங்கம் அமைவதையே இந்தியா விரும்புகிறது. இலங்கைத் தீவில் கடந்தகாலத்தில் இடம்பெற்ற பல சம்பவங்களில் பெற்றுக்கொண்டுள்ள அனுபவத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்ற போதும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் இந்தியா நட்புறவை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பிரச்சனத்தை இலங்கையில் குறைக்க டில்லி வகுத்துள்ள இந்த வியூகங்கள் குறித்து பெய்ஜிங் தனது இராஜதந்திரிகள் ஊடாக இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் நேரடியான கலந்துரையாடல்களை நடத்தும் நகர்வுகளை ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.