சஜித்-சம்பிக மோதல் தீவிரம்: புதியவருக்கு வாய்ப்பு, விரிசலடையும் கூட்டணி

OruvanOruvan

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க இடையிலான மோதல் தீவிரம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது

அதன் ஒரு கட்டமாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பமானதும் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழுக்களில் சம்பிக ரணவக்கவின் பெயர் எந்தவொரு குழுவுக்கும் முன்மொழியப்படவில்லை.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு முடியும் வரை எதிர்க்கட்சி சார்பில் அரசாங்கத்தின் நிதிக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்குப் பதிலாக இம்முறை அக்குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவின் பெயர் எதிர்க்கட்சித் தலைவரால் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு முடிவடையும் வரை, பாட்டலி சம்பிக்க ரணவக்க வழிவகைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழுவின் தலைவராக இருந்தார்.

சபாநாயகர் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, வழிவகைகள் குழுவுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பெயர் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.

குறிப்பாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான நாடாளுமன்ற நிதிக் குழுவின் செயற்பாட்டு உறுப்பினராக இருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹர்ச டி சில்வா வௌிநாடுகளுக்குப் பயணமான சந்தர்ப்பங்களில் அரச நிதிக்குழுவின் பதில் தலைவராகவும் பல தடவைகள் செயற்பட்டுள்ளார்.

ஆனால் இம்முறை எதிர்க்கட்சிக்கான ஒதுக்கீட்டின் நிமித்தம், பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயரை நீக்கிவிட்டு, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த கலாநிதி நாலக கொடஹேவா பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

முன்னதாக, பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்திலும் வெட்டு விழுந்திருந்ததாக கூறப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக சஜித் மற்றும் சம்பிக ரணவக்க இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.