தேர்தலை இலக்கு வைத்து மொட்டுக் கட்சியை உற்சாகப்படுத்தும் ரணில்: சஜித் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதல்

OruvanOruvan

police tear gas attack

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியை அடக்கிய பின்னர் அன்று வெளியில் வந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூட எதிர்க்கட்சிகள் எதுவும் இருக்கவில்லை.

அனைவரும் அச்சத்தில் அமைதியாக இருந்தனர். பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணையின் போது கூட எதிர்க்கட்சிகள் பயத்தில் வீதியில் இறங்கவில்லை.

எதிர்க்கட்சியினரின் இந்த அச்சத்தை போக்கி மக்களை வீதியில் இறக்குவதற்காக அன்றைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக மகிந்த ராஜபக்ச தெற்கில் இருந்து கொழும்பை நோக்கி பாத யாத்திரையை ஆரம்பித்தார்.

ஜனாதிபதி பிரேமதாச பாத யாத்திரையை தடை செய்வார் அல்லது அதன் மீது தாக்குதல் நடத்துவார் என பலரும் நினைத்தனர்.

பாத யாத்திரையில் பிரேமதாசவுக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகங்களுடன் கோஷங்கள் எழுப்பட்டாலும் பிரேமதாச பாத யாத்திரையில் சென்றவர்கள் மீது கையை கூட வைக்கவில்லை.

இதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஹொரகொல்லையில் அமைந்துள்ளது தனது தந்தையின் சமாதிக்கு அருகில் இருந்து காலிமுகத்திடல் நோக்கி பாத யாத்திரை ஒன்றை ஒழுங்கு செய்தார்.

அந்த பாத யாத்திரை மீதும் பிரேமதாச கை வைக்கவில்லை.

“ எனக்கு எதிராக பாத யாத்திரை செல்கின்றனர்” என்றே அவர் எதிர்க்கட்சியின் பாத யாத்திரையை விமர்சித்தார்.

எதிர்க்கட்சிகள் மனித சங்கிலியாக பிரேமதாச அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய போதிலும் பிரேமதாச அவற்றின் மீது தாக்குதல் நடத்தவில்லை.

பிரேமதாச கொலை செய்யப்பட்ட பின்னர், டி.பி. விஜேதுங்க பதவிக்கு வந்த சமயத்தில் சந்திரிகா, சூரியகந்தையில் மனித புதைக்குழியை தோண்டுவதற்கு சென்றார். எனினும் விஜேதுங்க அதனை அடக்கவில்லை.

1994 ஆம் ஆண்டு சந்திரிகா ஆட்சிக்கு வந்த பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியின் கொடியை கூட பறக்கவிடவில்லை. விரட்டி விரட்டி அடித்தார்.

எனினும் 1999 ஆம் ஆண்டு வடமேல் மாகாண சபை தேர்தல் மோசடி தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தியது.

அந்த போராட்டத்தின் மீது சந்திரிகாவின் அரசாங்கத்தை அடக்குமுறையை ஏவிவிடவில்லை.

2000 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி மக்களை ஒன்றிணைத்து மருதானையில் இருந்து ஜனபல வேகய என்ற எதிர்ப்பு பேரணியை நடத்தியது.

அதன் மீதும் சந்திரிகா அரசாங்கம் தாக்குதல் நடத்தவில்லை. எனினும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, சந்திரிகா அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இலக்கு வைத்து கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தினார்.

போராட்டத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். சுஜீவவுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது.

2001 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிக்கு வந்து விடுதலைப்புலிகளுடன் செய்துக்கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தெற்கில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி நடத்தியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் பொறுத்தது போதும் எனக்கூறி கொழும்பை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அந்த ஆர்ப்பாட்டங்கள் மீது ரணில் அரசாங்கம் தாக்குதல் நடத்தவில்லை.

2010 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மகிந்த ராஜபக்ச பதவி வந்த பின்னர், அவருக்கு எதிராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக சிறையில் அடைத்தார்.

அவரை விடுதலை செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய வாகன பேரணி மீது குண்டர்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் 2013 ஆம் ஆண்டு மருதானையில் ரணில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது மகிந்த அரசாங்கம் தாக்குதல் நடத்தவில்லை.

2015 ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராக தெரிவான பின்னர் மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிகள் கொழும்பு நோக்கி பேரணி நடத்தின.

ஆர்ப்பாட்டங்களை நடத்தின. காலிமுகத்திடலில் கூட்டங்களை நடத்தின. எனினும் மைத்திரியோ ரணிலோ அவற்றின் மீது தாக்குதல் நடத்தவில்லை.

2019 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முதலாவது பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தியது. முதல் முறையாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பெருந்திரளான மக்கள் கூடினர்.

இரண்டாவதாக பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுவே கடந்த ஆண்டு நடந்த மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

இதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து கொழும்புக்கு பேரணியாக வந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒரு கல்லை கூட எறியவில்லை.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார். அவர் பதவிக்கு வந்து ஓராண்டுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது.

ரணிலுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடத்தி முதல் போராட்டத்தின் மீது 2001 ஆம் ஆண்டு ரணிலை இலக்கு வைத்து சந்திரிகா நடத்திய தாக்குதலை போன்று ரணில் அரசாங்கம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது.

தாராளமய ஜனநாயகவாதியாகவே ரணில் விக்ரமசிங்க இலங்கையிலும் சர்வதேசத்தில் பார்க்கப்படுகிறார்.

அத்துடன் அவர் ஜனநாயகவாதிகள் சங்கத்தின் தெற்காசிய பிரதானிகளில் ஒருவர்.

அப்படியான ரணில் விக்ரமசிங்க தன்னை ஜனாதிபதியும் பிரதமராகவும் பதவிக்கு கொண்டு வர ஆர்ப்பாட்டங்களை நடத்திய, எதிர்ப்புகளில் ஈடுபட்ட, சுவரொட்டிகளை ஒட்டிய, வீடுகளை இழந்த, தொழில்களை இழந்த, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியினர் மீது ஏன் தாக்குதல் நடத்தினார்?.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு வந்த மைத்திபால சிறிசேனவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை கொழும்பில் ஒன்றுக்கூடிய போதும், காலிமுகத்திடலில் கூட்டங்களை நடத்திய போதும், ஏன் தாக்குதல் நடத்தவில்லை.

மகிந்தவுடன் இருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அப்பாவி தொண்டர்கள் என்பதை அறிந்தே அவர் தாக்குதல் நடத்தவில்லை. ரணிலுக்கு ஏன் இந்த எண்ணம் ஏற்படவில்லை என்பது கேள்விக்குறி.

2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவிக்கு வந்த ரணில் தேசத்துரோகி எனக்கூறி கொழும்புக்கு பேரணியில் வந்த சுதந்திரக்கட்சியினர் மீது கைவைக்காத ரணில், மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்புக்கு வந்த சுதந்திரக்கட்சியில் மீது கல்லை கூட எறியாத ரணில், தன்னை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர பாடுபட்ட தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியினர் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியது கவலைக்குரியது.

ரணிலுக்கு எதிராக சந்திரிகா அரசாங்கம் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்திய போது அதற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியினர் அச்சமின்றி மீண்டும் கொழும்புக்கு வந்தனர்.

2004 ஆம் ஆண்டு சந்திரிகா, ரணில் அரசாங்கத்தின் அமைச்சுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த ரணிலின் பிரதமர் பதவியை காப்பாற்றிக்கொடுக்க இந்த ஐக்கிய தேசியக்கட்சியினரே கொழும்புக்கு ஓடோடி வந்தனர்.

அந்த நேரத்தில் சந்திரிகாவின் வீட்டை முற்றுகையிடுவோம் என ரணில் கூறினால், அதற்கு தயாராகவே கட்சியினர் வந்திருந்தனர்.

2018 ஆம் ஆண்டு மைத்திரிபால, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய போது ரணிலுக்காக இந்த ஐக்கிய தேசியக்கட்சியினரே கொழும்புக்கு ஓடி வந்தனர்.

ரணில் அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியடைந்த போதிலும் அவர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்லவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு மகிந்தவுடன் உடன்பாடு இருந்தது என்று தெரியவந்த பின்னரே அவர்கள் கட்சியை விட்டுச் சென்றனர்.

ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் லொஹான் ரத்வத்தையை ராஜாங்க அமைச்சராக நியமித்தார்.

2001 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு கொண்டு வர பாடுபட்ட 10 பேர் உடத்தலவின்ன பிரதேசத்தில் உயிர்களை தியாகம் செய்தனர்.

லொஹான் ரத்வத்தே இந்த 10 பேரின் கொலைக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியவர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை நடத்திய பின்னர் ரணில், ராஜபக்ச குடும்பத்தவரான சஷீந்திர ராஜபக்சவுக்கு மற்றுமொரு ராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கினார்.

ஐக்கிய தேசியக்கட்சியினர் தனக்கு மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள், ஜனாதிபதி தேர்தலில் வெல்ல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் வாக்குகள் தேவை என்பதற்காக அந்த கட்சியினரை உற்சாகப்படுத்த ரணில் இப்படி செய்தாரா என்பது தெரியவில்லை.