18 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன தமிழ் இளைஞரை முன்னிலைப்படுத்துங்கள்: இராணுவத்திற்கு நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு

OruvanOruvan

Judge M.Ilancheliyan

பதினெட்டு (18) வருடங்களுக்கு முன்னர் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போனமைக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து காணாமல் போன தமிழ் இளைஞரான கந்தசாமி இளமாறன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் (07) வவுனியா மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் தீர்ப்பினை அறிவித்த நீதிபதி மா. இளஞ்செழியன், குறித்த இளைஞர் காணாமல் போனமைக்கு, அந்த நேரத்தில் ஓமந்தை கட்டளைத் தளபதி, அப்போதைய வன்னி பிராந்திய இராணுவத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ கட்டமைப்பிற்கு தலைவர் என்ற அடிப்படையில் அப்போதைய இலங்கை இராணுவத் தளபதி ஆகியோரே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் காணாமல்போன அந்த சமயத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா செயற்பட்டிருந்ததோடு, வன்னி பிராந்திய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் டபிள்யூ.யூ.பி எதிரிசிங்க செயற்பட்டிருந்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு அமைய, எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த இளைஞரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை இராணுவத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு முன்னிலைப்படுத்தாவிடின் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, பொறுப்புக்கூற வேண்டியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று இராணுவ அதிகாரிகளும் இளைஞரின் தாயாருக்கு ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈட்டை செலுத்த வேண்டுமெனவும் நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இளைஞர் காணாமல் போனமைத் தொடர்பாக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமான ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்த கந்தசாமி இளமாறன் என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார்.

ஓமந்தை சோதனைச் சாவடி பதிவு புத்தகத்தில், குறித்த இளைஞர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வந்தமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

எனினும், அந்த இளைஞரை தாங்கள் கைது செய்யவில்லை எனவும், தடுத்து வைக்கவில்லை எனவும், இராணுவ தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இறுதியாக இளைஞர் காணப்பட்ட இடம் ஓமந்தை சோதனை சாவடி எனவும், அதன் பின்னரே அவர் காணமல் போயுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த நீதிபதி, இளைஞர் காணாமல்போனமைக்கு இலங்கை இராணுவத்தினரே பொறுப்பு எனத் தீர்ப்பளித்துள்ளார்.