மும்முனைப் போட்டியில் ஜனாதிபதி தேர்தல் - களம் யாருக்கு சாதகம்?: ரணிலை ஆதரிக்கும் விக்னேஸ்வரன்

OruvanOruvan

Ranil vs Vigneshwaran

ஜனாதிபதித் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இலங்கையர்களிடத்தில் மாத்திரமல்ல சர்வதேச சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. அமேரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்டு இலங்கை தொடர்பில் அதீத ஆர்வம் காட்டும் நாடுகள் தேர்தல் குறித்து கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த அடிப்படையிலே, 2024 ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டிருந்தது. அரசியலமைப்பின் படி, எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்த பின்னணியில், ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கடும் போட்டி நிலவுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எங்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட மேலும் சிலர் வேட்பாளர்களாக களமிறங்கலாம் என்ற நிலை காணப்படுகிறது.

இப்போதைய சூழ்நிலையில், ரணில் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு மாறாக அனுரவுக்கே அதிக ஆதரவு காணப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த அடிப்படையில் இந்தியா தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஏனைய நாடுகளின் நகர்வுகளை எதிர்வரும் நாட்களில் அறிந்துகொள்ள முடியும்.

சர்வதேசத்தின் நிலைமை இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையின் பின்னர் சில காட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன்படி, வடகிழக்கை பொறுத்தவரையில் ஜனாதிபதிக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த அடிப்படையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போதைய நிலையில் நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாடு தமது தொகுதிக்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறுவொரு தலைவர் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சி.வி.இன் இந்த நிலைப்பாடு பரவலாக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டேன் என கடிதம் அனுப்பிவைத்தவர் விக்னேஸ்வரன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைப்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என தெரிவித்தே இந்த சந்திப்பை தவிர்த்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த விடயம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள போதிலும், சி.வி. ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக விக்னேஸ்வரன் அறிவித்ததன் தொடர்ச்சியாகவே இதனை பார்க்க முடிகின்றது.

இதேபோன்று, மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற வேட்பாளர்கள் சிலரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கரம்கோர்த்துள்ள நிலைமையினை அவதானிக்க முடிகிறது.