ஜே.வி.பியை டில்லி அழைத்ததா அல்லது அநுர வலிந்து சென்றாரா?: அமெரிக்காவில் இந்தியாவை புகழ்ந்து பேசியமைக்கான காரணம்?

OruvanOruvan

இந்தியாவுக்கு எதிராக தீவிர பிரசாரங்களில் குறிப்பாக ஈழத் தமிழர் சார்ந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துவந்த ஜே.வி.பி. திடீரென புதுடில்லியுடன் உறவு வைத்தமைக்கான வியூகங்கள் எதுவாக இருக்குமென்ற கேள்விகள், சந்தேகங்கள் வலுபெறுகின்றன.

இந்தியா அழைத்ததா அல்லது இந்தியாவுடன் நெருங்கினால் சீனா தங்களுடன் நெருங்கிவருமா என்ற நம்பிக்கையுடன் ஜே.வி.பி. இந்தியாவுக்குச் சென்றதா அல்லது ஜே.வி.பியை அழைத்ததால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தங்களுடைய புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்ப நெருங்கிவருமா என்ற உத்தியுடன் புதுடெல்லி அழைத்ததா என்ற கேள்விகளும் உண்டு.

ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழுவின் இந்திய தலைநகர் புதுடில்லி, குஜராத் உட்பட பல்வேறு நகரங்களுக்குச் சென்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியா எங்கள் அயல் நாடு

தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா வழங்கியுள்ள முக்கியத்துவம் இலங்கை மாத்திரமின்றி பல்வேறு சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பரப்பிய ஜே.வி.பிக்கு எவ்வாறு இந்தியா சிவப்பு கம்பள வரவேற்பை வழங்கியது என்பதே இலங்கையில் உள்ள பல அரசியல்வாதிகளை சிந்திக்க வைத்துள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்தையும் அதன் ஊடாக இடம்பெற்ற வடக்கு, கிழக்கு இணைப்பையும் ஜே.வி.பி கடுமையாக எதிர்த்து இருந்தது.

சோமவங்ச அமரவீர, விமல் வீரவங்க போன்ற கடும் போக்கு தலைவர்கள் ஜே.வி.பியில் இருந்து விலகிய பின்னர் அக்கட்சியின் இறுக்கமான கொள்கைகளில் தளர்வுகள் ஏற்பட்டதுடன், சர்வதேச நாடுகளுடனான உறவுகளையும் வலுப்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு சார்பாக வெளியிட்டிருந்த கருத்துகள் மற்றும் பூகோள அரசியல் பற்றிய ஜே.வி.பியின் நிலைப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளே இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிந்தது.

”இந்தியா என்பது எமக்கு அருகில் இருக்கும் உலகின் பலம்வாய்ந்த நாடாகும். நாம் விரும்பியோ விரும்பாமலோ எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் இந்தியாவின் நலனை அடிப்படையாக கொண்டே எடுக்க வேண்டும்.” என அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவில் கூறியிருந்தார்.

ஜே.வி.பியை அவதானிக்கும் இந்தியா

அநுரவின் இந்தக் கருத்துக்கு பின்னர் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஜே.வி.பியுடன் நெருங்கமான உறவுகளை பேண விரும்பி வருவதுடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களையும் இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட உயர்ஸ்தானிகராலயத்தின் முக்கிய அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்புலத்தில்தான் அநுரவை டில்லிக்கு அழைத்து கௌரவமளித்து நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள இந்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு ஜே.வி.பியும் இணங்கியுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்திக்கு உள்நாட்டில் அதிகரித்துவரும் மக்கள் ஆதரவையும் இந்தியா தொடர்ந்து அவதானித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.