இலங்கையர் என்பதில் பெருமடைகின்றோம்: சட்ட ரீதியான இன அந்தஸ்தை வலியுறுத்தும் மலையகத் தமிழர்கள்

OruvanOruvan

சனத்தொகை மதிப்பீட்டில் “மலையகத் தமிழர்கள்” என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி முப்பதாயிரம் பேரின் கையெழுத்து அடங்கிய மனு புள்ளிவிபரத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கையெழுத்து இடப்பட்ட மனுவினை புள்ளிவிபரத் திணைக்களத்தில் ஒப்படைத்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சிவில் சமூக செயற்பாட்டாளர் அருணாச்சலம் சண்முகவடிவு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய இளம் சந்ததியினர் தங்களை இந்திய தமிழர் என்று காட்டுவதற்கு விரும்புவதில்லை. தங்களை இலங்கையர்கள் எனக்கூறுவதில் பெருமையடைகின்றனர்.

இலங்கை தமிழர் என்ற அடிப்படையில் கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது தங்களை இலங்கை தமிழர் என்று அடையாளப்படுத்தியதன் காரணமாக குடிசன மதிப்பீட்டில் பாரியளவில் சனத்தொகை குறைவடைந்து சென்றது.

இதனால் மலையகத் தமிழர்கள் பாரியளவில் பாதிப்படைந்துள்ளனர். தேசிய நீரோட்டத்தில் இணைய மலையகத் தமிழர்கள் என்ற இன அந்தஸ்து கிடைக்கப்பெற வேண்டும்.

இதனை வலியுறுத்தி முப்பதாயிரம் பேரின் கையெழுத்து அடங்கிய மனுவை புள்ளிவிபரத் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளோம்.

அனைவராலும் மலையகத் தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட்டாலும் நாம் இன்னும் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.” என தெரிவித்தார்.