சரணடைந்த புலிகள் எங்கே: நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இராணுவத்துக்கு உத்தரவு

OruvanOruvan

இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இலங்கை இராணுவத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஷால் 2019 ஆம் ஆண்டு கோரப்பட்டது.

எனினும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை. இலங்கை அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தார்கள்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மறுப்புக்கு எதிராக தகவலறியும் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு மூன்று வருடங்களுக்கு பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகளின்போது சட்டத்தரணிகளான சுவஸ்ரிக்கா அருலிங்கம், சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

நீண்ட விசாரணைகளின் பின்னர் சரணடைந்த புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்த இராணுவத்தின் தீர்மானத்துக்கு அனுதியளிக்கும் வகையில், 2023ஆம் ஆண்டு நவம்பர் 08ஆம் திகதி தகவலறியும் ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆணைக்குழு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் சார்பில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் டி.என்.சமரகோன் முன்னிலையில் இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மனுவை பரிசீலனை செய்திருந்த நீதியரசர் டி.என்.சமரகோன் மனுதாரர் சார்பில் ஆரம்பக்கட்ட பரிசீலனைகள் அவசியமில்லை எனவும் எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி இலங்கை இராணுவம் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் அறிவித்தல் விடுத்தார்.