கொலை செய்யப்பட்டாரா சனத் நிஷாந்த?: மனைவி சிஐடியில் முறைப்பாடு

OruvanOruvan

மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அவரது மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கணவர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத் தெரிவித்து அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கடந்த ஜனவரி 25 ஆம் திகதி, சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், அதிகாலை 02:00 மணியளவில் சாலையோரத் தடையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் அமைச்சர் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் மற்றும் அவரின் மெய்பாதுகாவளர் இருவரும் உயிரிழந்தனர்.

கால் மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சனத் நிஷாந்த உயிரிழந்ததாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சனத் நிஷாந்த பயணித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து அவரது மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.