பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்திய ரணில்: கொள்கை விளக்கத்தில் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் தவிர்ப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் இலங்கைத் தீவின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய விபரங்கள் எதிர்கால பொருளாதார செயற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இன்று புதன்கிழமை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் ஆரம்பித்து வைத்தார்.
அங்கு நிகழ்த்திய சிம்மாசன உரையில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட கொள்கைகள் பற்றி விரிவாக விளக்கம் அளித்ததுடன், அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கான பொருளாதார தந்திரோபாயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
புவிசார் அரசியல் போட்டிச் சூழலில் இலங்கையின் பொருளாதார நிலைமை குறிப்பாக 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், அதன் பின்னரான பொருளாதார பலவீனங்களையும் ரணில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இருந்தாலும், தற்போதைய பொருளாதார முன்னேற்றங்களில் திருப்தியடையும் ஜனாதிபதி ரணில், இலங்கைத் தீவில் நீண்டகாலமாக நீடித்து வரும் இன முரண்பாட்டுத் தீர்வுக்கான பரிந்துரைகள் எதனையும் முன்வைக்கவில்லை.
அமெரிக்க - இந்திய அரசுகளுடனும் சீனாவுடனும் உறவினைப் பேணுகின்ற முறைமைகள் ரணில் நிகழ்த்திய உரையின் தொனியில் தென்படுகின்றன.