யாழ்.புத்தூர் பகுதியில் பொலிஸார் துப்பாக்கி சூடு: மூவர் கைது

OruvanOruvan

Gun shoot in Jaffna

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது இன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மணலுடன், டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழிமறித்துள்ளனர்.

பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தி வந்த பொலிஸார், மக்கள் நடமாட்டம் குறைந்த வீரவாணி எனும் பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குறித்த டிப்பர் ரக வாகனத்தை தடம்புரளச் செய்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான டிப்பர் ரக வாகனத்தின் டயர் மீது துப்பாக்கி அவைகள் பாய்ந்ததில் சாரதி உட்பட இருவர் வாகனத்துடன் சேர்ந்து தடம் புரண்டனர்.

இவர்களை கடமையிலிருந்த காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் கைதுசெய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பளைப்பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பர் ரக வாகனத்தின் உரிமையாளர் எனக் கருதப்படும் இளைஞர் ஒருவரையும் அவ்விடத்தில் வைத்து காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

மேலும், கைதான மூவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.