அநுரவின் டில்லி பயணத்தால் சீனா அதிருப்தி: இலங்கைத் தீவில் உருவாகும் புதிய மாற்றங்கள் ; ஜே.வி.பி மீது இந்தியா நம்பிக்கை

OruvanOruvan

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழுவினர் பல்வேறு அதிகாரப்பூர்வ சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார திஸாநாயக்க, இருநாட்டு அரசியல் விவகாரங்கள், பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்தியாவின் ரகசிய பரிந்துரைகளுக்கு இணக்கம்

இந்த சந்திப்பு மிகவும் தீர்மானமிக்கதொரு சந்திப்பாக அமைந்ததாக சுப்ரமணியம் ஜெய்சங்கர் தமது 'எக்ஸ்' தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் அநுர தலைமையிலான உயர்மட்ட குழு கலந்துரையாடில்களை நடத்தியிருந்தது.

அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சில பரிந்துரைகளை வழங்கியதாக ஜேவிபியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

அந்த பரிந்துரைகள் பின்வருமாறு,

  • கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்த மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வேண்டுமானால் சிங்களப் பிரதேசங்களின் மாகாண சபை முறையை இரத்துச் செய்யலாம்.

  • தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையேயான சுமார் 32 கிலோ மீட்டர் நீளமுடைய பாலத்தை அமைப்பதற்கு இணங்க வேண்டும்.

ஆகிய மூன்று பரிந்துரைகளையும் ஜெயசங்கர் வழங்கியிருக்கின்றார்.

இந்த நிலையில், புதுடில்லியில் 'தி ஹிந்து' பத்திரிக்கைக்கு கடந்த ஆண்டு அநுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ள செவ்வியில்,

கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இலங்கைத் தீவு நாடு எடுக்கும் எந்தவொரு முடிவும், அது இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்

“எங்கள் நெருங்கிய அண்டை நாடான இந்தியா ஒரு முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

எனவே, நாம் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, அது இந்தியாவை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாங்கள் கவனிப்போம்," என்று திசாநாயக்க கடந்த ஆண்டு 'தி ஹிந்து'விடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜே.வி.பியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து சீனா அதிருப்தியில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

அநுரவின் இந்திய பயணம் மீது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ள சீனா, அவரது சந்திப்புகள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளது.

அநுரவின் சந்திப்புகளால் எரிச்சல் அடையும் சீனா

கடந்த காலத்தில் அமையப் பெற்ற அரசாங்கங்களுடன் சீனா நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டமையால் இலங்கைத் தீவின் தெற்கு பகுதி அரசியலில் சீனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன், சீன முதலீட்டுகளுக்கு அதிகமான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளதால் எதிர்காலத்தில் ஒரு பாரிய அரசியல் சக்தியாக இது வளர்ச்சியடைக்கூடுமென இந்தியா கணித்துள்ளது.

அதன் காரணமே சீனாவுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தியுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது.

முந்திக்கொண்ட இந்தியா

புதுடில்லிக்கு தெற்கில் ஒரு நம்பகமான கூட்டாளியாக இருக்க ஜே.வி.பி உருவாகுவது சீனாவை எரிச்சலடையச் செய்யும். சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் நலன்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. இலங்கைத் தீவில் ஆட்சிமாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையில் சீனாவின் எதிர்கால இருப்புக்கு ஆபத்தாக மாறும்.

அதனால்தான் ஆளும் அரசாங்கங்களுடன் சீனா எப்போதும் நெருக்கமான உறவை பேணி வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவின் திட்டங்களை கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தி அதிகாரத்துக்கு வந்திருத்த போதிலும், இறுதியில் சீனாவின் பல திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி கம்யூனிச பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி உருவான கட்சி என்பதால் அதன் கொள்கைகள் சீனாவுக்கு சார்பானதாக இருக்கும் என பரவலாக பேசப்பட்டது.

இலங்கைத் தீவில் இந்தியா, சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் போட்டித்தன்மையானது ஜே.வி.பி.யின் அரசியல் கதாப்பாத்திரம் வலுப்பெறும் பட்சத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன், பல்வேறு இராஜதந்திர முறுகல்களை ஏற்படுத்தும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது.

ஆனால், கடந்த கால அனுபவங்கள் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பன இலங்கை தீவின் எதிர்கால அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜே.வி.பி உணர்ந்துள்ளதாலேயே டில்லி நோக்கி சென்றுள்ளது.

அதேபோன்று பூகோள அரசியல் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு மறுசீரமைக்கப்பட்டு வரும் ஒரு கட்சியாகவும் ஜே.வி.பி உள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது இந்தியாவின் நோக்கமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.