டில்லியில் 'ரை கோட்' அரசியல்: அநுரவை இந்தியா அழைத்தமை பலருக்கு பொறுக்கவில்லை என்கிறது ஜே.வி.பி

OruvanOruvan

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் புதுடில்லிக்குச் சென்று பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டுவரும் விவகாரம் இலங்கையில் மிகப்பெரிய அரசியல் அதிர்வலைகளை ஏற்பட்டுத்தியுள்ளது.

இருநாட்டு அரசியல், சமூக, பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில அநுர தலைமையிலான உயர்மட்ட குழு இந்த சந்திப்புகளில் கலந்துரையாடியுள்ளது.

இலங்கைத் தீவில் எதிர்க்கட்சியாக கூட இல்லாத ஜே.வி.பியை அழைத்து இந்தியா அளித்துள்ள கௌரம் என்பது உள்நாட்டில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விஸ்தரிப்பு வாதத்தை நாட்டில் விதைத்த முக்கிய கட்சிகளில் ஜே.வி.பியும் ஒன்றும். அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த பிரதானக் கட்சியாகவும் ஜே.வி.பி கடந்த காலத்தில் திகழ்ந்தது.

ஆனால், இந்திய அரசாங்கம் விடுத்திருந்த அழைப்பை ஏற்று அநுர தலைமையிலான உயர்மட்ட குழுவினர் இந்தியா சென்று நடத்தியுள்ள சந்திப்புகள் மற்றும் பேசப்பட்டுள்ள விடங்கள் ரணிலின் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியையும் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியா வழங்கியுள்ள கௌரவம் ஜே.வி.பிக்கு அரசியல் ரீதியாக கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

”அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் பல வகையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பொறாமை காரணமைாகவே இவ்வாறு தெரிவிக்கின்றனர்.” என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

”அநுரவின் இந்தியப் பயணம் குறித்து பல்வேறு கருத்துக்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.

ஜே.வி.பியில் இருந்திருந்தால் ஒரு சிறந்த இடத்திற்கு சென்றிருக்க முடியும் என்ற ஆதங்கத்தில் விமல் வீரவங்ச கருத்து வெளியிடுகிறார்.

ரணில் விக்ரமசிங்கவின் வேதனை என்பது வர்க்க பாசாங்குத்தனம். எங்கள் வகுப்பினர் அன்றாடம் உடுத்தும் ஆடைகளை ஏன் அநுர அணிகிறார் என்ற வேதனையில் அவர் இருக்கிறார். போலித்தனத்தை விட ரணிலின் கபட நாடகம் ஆபத்தானது.

தபுத்தேகமவில் பிறந்து ரயிலில் வெற்றிலை பாக்கு விற்ற அநுரவை உலகின் பலம் பொருந்திய நாடான இந்தியா அழைத்து உரையாடுகிறது. இதனை உயர் வர்க்கத்தினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவர்களை பொறுத்தவரை 80களில் இருந்து ஜே.வி.பியின் நிலைப்பாடு பற்றியே பேசுகின்றனர். நாம் பூகோள அரசியல் சுழலில் இருக்கிறோம். நவீன அரசியலுடன் புதிய உத்திகளை கையாண்டு வருகிறோம்.” என்றார்.