ரணிலை ஜனாதிபதியாக்க அமெரிக்கா கையாளும் உத்தி: சஜித் பற்றி பேசிய இராஜதந்திரி, புதுடில்லியின் கோரிக்கை ஜேவிபியிடம்

OruvanOruvan

அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜதந்திரி ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் சுமார் அரை மணி நேரம் உரையாடியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே இந்த உரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் எமது செய்தி பிரிவுக்கு தெரிவிக்கின்றன.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த கூட்டுக் கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது குறித்து அமெரிக்க இராஜதந்திரி பரிந்துரை வழங்கியிருக்கின்றார்.

அத்துடன், "திருகோணமலையை மையப்படுத்திய அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் (US Millennium Challenge) திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்."

"அதற்கு இணங்கினால் ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அமெரிக்க இராஜதந்திரியின் உரையாடல் தொனி அமைந்ததாகவும்" அந்த உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுடன் மிகச் சமீபகாலமாக முரண்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புவிசார் அரசியல் நோக்கில் தமக்கு ஆதரவான ஒருவரை வேட்பாளராக நியமிக்க தீவிர முயற்சியெடுத்து வருகின்றது.

இப்பின்னணியிலேயே இந்த தொலைபேசிய உரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

சஜித் பிரேமதாசவிற்கு அமெரிக்கா ஆதரவென்று கூறமுடியாது. ஆனாலும், ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ரணில் மற்றும் சஜித் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுகின்றதோ என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் ஜேவிபி தலைவர் அனுகுமார திஸாநாயக்க புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரை நேற்று திங்கட்கிழமை சந்தித்திருக்கின்றார்.

ஜேவிபி அமெரிக்காவுடன் ஒத்துப் போகும் சக்தியல்ல. ஆனால் இந்தியா ஜேவிபியை அரவணைக்க முற்படுகின்றது.

ஏனெனில் அந்தக் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சில வேளைகளில் அனுரகுமார ஜனாதிபதியாகலாம் என்ற ஐயமும் இந்தியாவிற்கு உண்டு.

இதன் காரணமாக அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சில பரிந்துரைகளை வழங்கியதாக ஜேவிபியின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

அந்த பரிந்துரைகள் பின்வருமாறு,

  • கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்த மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வேண்டுமானால் சிங்களப் பிரதேசங்களின் மாகாண சபை முறையை இரத்துச் செய்யலாம்.

  • தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையேயான சுமார் 32 கிலோ மீட்டர் நீளமுடைய பாலத்தை அமைப்பதற்கு இணங்க வேண்டும்.

ஆகிய மூன்று பரிந்துரைகளையும் ஜெயசங்கர் வழங்கியிருக்கின்றார்.

இது குறித்து கட்சியின் மத்தியக் குழுவில் தீர்மானிப்பதாக அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருக்கிறார்.

இந்தியாவிற்கும் ஜேவிபிக்குமான உறவு இந்தச் சந்திப்பில் வெளிப்பட்டதாக புதுடில்லியில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் எமது செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.

இப்பின்னணியில் ஜனாதிபதி ரணிலுடன் உரையாற்றிய அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியந்திற்கான இராஜதந்திரி ரணிலிடம் இருந்து சாதகமான பதிலை விரைவாக எதிர்பார்ப்பதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் தெரவிக்கின்றன.

குறிப்பாக மில்லேனியம் சவால்கள் திட்டத்தை ரணில் ஏற்கவேண்டும் என அமெரிக்கா எதிர்ப்பார்கின்றது. இதற்காகவே சஜித்தை ஜனாதிபதியாக்கினால் என்ன என்ற உரையாடல் தொனியையும் அமெரிக்க இராஜதந்திரி வெளிப்படுத்தியிருக்க கூடும்.

ரணில் - மைத்திரி அரசாங்கம் பதவியில் இருந்து போது, 2018இல் மில்லேனியம் சவால்கள் உடன்படிக்கை செய்யப்பட்டது. ஆனால் மைத்திரிபால சிறிசேன பின்னர் அதனை நிராகரித்துவிட்டார்.

அதற்கு ரணிலும் மறைமுகமாக ஆதரவு கொடுத்திருந்தார். 2020 இல் ஜனாதிபதியாக பதிவியேற்ற கோட்டாபய முற்றாக இரத்துச் செய்துவிட்டார்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து பயணிக்கும் அமெரிக்கா இந்தோ - பசுபிக் விவகாரத்தில் குறிப்பாக குவாட் இராணுவ கூட்டு அணி விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டு வருகின்றது.

அத்துடன், இலங்கை சீனாவுடன் அதிகளவில் இணைய கூடாது என்ற வியடத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் மிகவும் அவதானமாக செயற்படுகின்றன.

எவ்வாறாயினும், இலங்கைத் தீவில் சிங்கள அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களை கையாண்டு தமது புவிசார் அரசியல் நலன்களுக்குரிய ஜனாதிபதியை கொண்டு வருவதில் பெரும் சிரமங்களை அமெரிக்க - இந்திய அரசுகள் எதிர்நோக்குவதையே மேற்படி தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.