தாய்லாந்தில் கஞ்சா பொழுதுபோக்கு பொருள்: அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டம்

OruvanOruvan

தாய்லாந்தில் கஞ்சா பயன்படுத்துவது குற்றச் செயல் அல்ல என 2022ஆம் ஆண்டில் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலிலிருந்து கஞ்சாவை கடந்த ஜூன் மாதம் அரசாங்கம் நீக்கியிருந்தது.

இதன் விளைவாக கஞ்சா விற்கும் கடைகள் தாய்லாந்து முழுவதிலும் பல இடங்களில் திறக்கப்பட்டன. குறிப்பாக, தலைநகர் பேங்காக்கில் பல கஞ்சா கடைகள் திறக்கப்பட்டன.

தாய்லாந்தில் திடீரென்று பல கஞ்சா கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து, கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் ஸ்ரீகாவ் தெரிவித்தார்.

கஞ்சாவை சுகாதாரம் மற்றும் மருத்துவத்துக்காக மட்டுமே பயன்படுத்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.

‘‘பொழுதுபோக்கிற்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது தவறு என்பதே எங்கள் நிலைப்பாடு.‘‘ என அமைச்சர் ஸ்ரீகாவ் கூறுகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி ஏற்ற சிரேட்டா தவிசின், பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதற்கு எதிராக அடிக்கடி குரல் எழுப்பியவராகும். மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே கஞ்சா பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு.

கடந்த வாரயிறுதியில் பிரிட்டிஷ் இசைக் குழு ‘கோல்ட்பிளே’ பேங்காக்கில் கலைநிகழ்ச்சி நடத்தியது. கலைநிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் முழவதும் கஞ்சா வாடை வீசியதாக கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் சமூக ஊடகம் மூலம் அதிருப்தி தெரிவித்தனர்.

அதன் காரணமாகவே பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தடை செய்ய தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.