நிதிக்குழு விசாரணைகளை முடக்குவதற்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது: ஜி.எல். பீரிஸ் குற்றச்சாட்டு
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பொது நிதி தொடர்பான ஆறு நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் நோக்குடனே பாராளுமன்ற அமர்வு அண்மையில் ஒத்திவைக்கப்பட்டதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன்படி, 91 குழுக்களில் 64 குழுக்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாடாளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இரண்டு சந்தர்ப்பங்களின்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70(1) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நள்ளிரவு ரணில் விக்ரமசிங்கவினால் முதன் முதலாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.