யுக்திய சுற்றிவளைப்பின் 50 ஆவது நாள்: 56,541 நபர்கள் கைது, தொடரும் துப்பாக்கிச் சூடுகள்

OruvanOruvan

Yukthiya operation

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்தியா நடவடிக்கையின் 50 ஆவது நாளான இன்று இதுவரை 56,541 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கிய 'யுக்திய' நடவடிக்கை இன்று (6) 50 நாட்கள் நிறைவடைந்தது.

இதன்போது, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 49,558 சந்தேக நபர்களும் குற்றவியல் திணைக்களத்திற்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 6,983 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 49,558 சந்தேக நபர்களில், 1,817 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், 1,981 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

234 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 3,083 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

775 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த சந்தை பெறுமதி 775 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் சந்தை பெறுமதி 73 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நாட்களில், 142 கிலோ ஹெரோயின், 208 கிலோ ஐஸ், 974 கிராம் கொக்கெய்ன், 49 கிலோ அபின், 7 கிலோ ஹாஷிஸ், 36 கிலோ அசீஸ் , 2678 கிலோ கஞ்சா மற்றும் 360,821 போதை மாத்திரைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 6,983 சந்தேக நபர்களில் 1,117 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 5,286 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தல்

எவ்வாறெனினும் பாதுகாப்பு படையினரால் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒரு புறம் தொடர்ந்த வண்ணம் இருக்க, மறுபுறம் பொது மக்கள் வீதிகளில் பயணிக்க முடியாத அச்ச நிலைமையும் நாட்டில் தோன்றியுள்ளது.

காரணம் அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் அடையாளம் தெரியாத நபர்களினாலும், ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களாலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனால் பலர் உயிரிழந்துள்ளதுடன், காயங்களும் ஏற்பட்டுள்ளதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

OruvanOruvan

Beliatta Gun Fire

சிறைச்சாலைகளில் கைதிகளின் நெருக்கடி

இலங்கை சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க கடந்த மாதம் கூறியிருந்தார்.

கடந்த மாதம் அவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக ஏறத்தாழ 32,000 நபர்கள் இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த உயர்வுக்கு விடையிறுக்கும் வகையில், அதிகரித்து வரும் கைதிகளின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கான முயற்சிகளை திஸாநாயக்க கோடிட்டுக் காட்டினார்.

பல்வேறு குற்றங்களுக்காக ஓரிரு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பல்லன்சேன சிறைச்சாலை முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும், சில குற்றவாளிகள் சிறை தொழிலாளர் முகாம்கள் மற்றும் திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படுவதாக திஸாநாயக்க குறிப்பிட்டார்.

யுக்தியவில் கைதாகும் நபர்களின் நிலை என்ன?

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்கனவே கைதிகளின் நெருக்கடிகள் நிலவுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் யுக்திய சுற்றிவளைப்பினால் கைது செய்யப்படும் கைதிகள் எங்கு கொண்ட செல்லப்படுகின்றார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த கேள்விக்கு பதிலுக்கும் வகையில், கைதாகும் கைதிகளில் புனர்வாழ்வு என்ற பெயரில் பலர் கந்தக்காடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் தற்போது, பாதுகாப்பற்ற நிலையே கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலும் நிலவுவதை அங்கு பதிவாகும் தொடர் வன்முறை சம்பவங்கள் மூலமாக நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.

கந்தக்காடு புனர்வழ்வு நிலையத்தில் அண்மைக்காலமாக கைதிகளுக்கு இடையில் அடிக்கடி மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலினால் பல கைதிகள் காயமடைவதுடன், பல கைதிகள் தப்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் யுக்திய குற்றச்சாட்டில் கைதாகி புனர்வாழ்வுக்காக கந்தக்காடுக்கு அனுப்பி வைக்கப்படும் கைதிகளின் பாதுகாப்பு என்பதும் கேள்விக் குறியாகவே அமைந்துள்ளது எனலாம்.

OruvanOruvan

kandakadu treatment and rehabilitation centre

இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுக் காவல்

சிவில் குற்றங்களில் ஈடுபட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன கூறியதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைதிகள் வீட்டுக்காவலில் இருப்பதையும், நீதிமன்றங்கள் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்குவதையும் உறுதிசெய்ய சிறை அதிகாரிகள் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

இதற்காக தேவையான சட்டத்தை சட்ட வரைவாளர் திணைக்களம் தயாரித்து வருவதாகவும், அது நிறைவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்வனவு 13,000 ஆக காணப்படுகிறது. ஆனால் தற்போது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 33,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.