மக்கள் மனங்களை வெல்வாரா ரணில்?: பதவியை இழப்பாரா சபாநாயகர்?

OruvanOruvan

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன.

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் உள்வாங்கப்படாமல் அதனை அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது.

இந்தச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாமையால் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது எனக் குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சிகள், சட்டத்தை சான்றுப்படுத்திய சபாநாயகருக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணாக சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என எதிரணிகள் குற்றஞ்சாட்டி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஆலோசித்து வருகின்றன.

மக்களை கவரப்போகும் ரணில்

இந்த நிலையில், நாளை மறுதினம் புதன்கிழமை நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிம்மாசன உரையை நிகழ்த்த உள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படாமை மற்றும் ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளமை ஆகிய காரணங்களால் ஜனாதிபதியின் சிம்மாச உரைமீது மக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து ரணில் சில அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

கடந்த 24ஆம் திகதி நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன், நாடாளுமன்றக் கூட்டத்தொடரும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரையே நாளைமறுதினம் ஜனாதிபதி ஆரம்பித்துவைக்க உள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.