கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானமா?: கசிந்த அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்

OruvanOruvan

Kehalia Rambukwella

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றாடல் அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த 2ஆம் திகதி கெஹலியவைக் கைது செய்திருந்தது.

அதன் பின் கடந்த மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒருவரை தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடும் என்று பல்வேறு தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதனையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் மூலம் இத்தகவல் கசிந்துள்ளது.

இதேவேளை, அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரம்புக்வெல்லவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோருகிறது.

மேலும் அமைச்சரவையில் கெஹலிய தொடர்ந்தும் நீடித்திருந்தால், எதிர்கால விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் அவ்வாறான ஒருவரை அமைச்சரவையில் வைத்தால் சர்வதேச ரீதியிலும் நாட்டின் அமைச்சரவை தொடர்பில் அதிருப்தி ஏற்படலாம் எனவும் அதன் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ராஜினாமா?

சுற்றாடல் அமைச்சுப் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமாச் செய்யவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடிச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த 02ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்

அதன் பின் கடந்த 03 ஆம் திகதி மாளிகாகந்தை நீதவான் சுலோசனா பிரதீபா அபேவிக்கிரம, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை அமைச்சுப் பதவியில் நீடிக்க இடமளிப்பது சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று அரசாங்க உயர்மட்டம் கருதியதன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து கெஹலியவை நீக்க தீர்மானிக்கப்பட்டது

அதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தின் உயரதிகாரி ஒருவர் ஊடாக , அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு கெஹலியவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் இன்றைய தினம் கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது

கெஹலியவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கையெழுத்து சேகரிப்பு

கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தும் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக குறித்த கையெழுத்து சேகரிப்பு இயக்கம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய சிவில் அமைப்பு முன்னணியுடன் வெகுஜன அமைப்புகள் பலவும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

மோசடிக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை அமைச்சர் பதவியில் நீடிக்க இடமளிக்காது, உடனடியாக அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

“அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே மக்கள் நம்பிக்கையுடன் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வர். கெஹலிய ரம்புகெல்லவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.