'உறுமய' தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...
'உறுமய' தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
இலங்கையில் 20 இலட்சம் மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
இந்தியா எரிசக்தி வாரம் 2024 மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர் காஞ்சன
இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் அழைப்பின் பேரில், கோவாவில் நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வாரம்’ மாநாட்டில் இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கலந்து கொள்ளவுள்ளார்.
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வண்டியை செலுத்திய சாரதிக்கு இன்று திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த செந்தில் தொண்டமான்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
10 விக்கெட்டுகளினால் இலங்கை வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.
இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை சமப்படுத்திய இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியது. போட்டியின் ஆட்டநாயகனாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவானார்.
நிதி முறைகேடு தொடர்பில் 12 நிறுவனங்கள் மீது விசாரணை
நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 12 நிறுவனங்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கணக்காய்வுகளை மேற்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 307.70 ரூபாவாகவும், 317. 25 ரூபாவாகவும் காணப்படுகிறது.
மரம் முறிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவன் பலி, மேலும் மூவர் காயம்
கம்பளை பகுதியில் பாடசாலையொன்றில் மாணவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கெஹலிவை சிறைச்சாலையில் இருந்து தனியார் வைத்தியசாலைக்கு மாற்ற முயற்சி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சிவில் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு வீட்டுக் காவல்
சிவில் குற்றங்களில் ஈடுபட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் - இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன
சிறைக்கு சென்று ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் சம்பாதித்து கொடுத்த கைதிகள்
அனுராதபுரம் சிறைச்சாலையின் கைதிகள் தயாரிக்கும் அரிசி, பாண் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மூலம் கடந்த ஆண்டில் மாத்திரம் இலங்கை சிறைச்சாலை திணைக்கத்திற்கு ஒரு கோடியே 46 லட்சம் ரூபா வருமானம் கிடைத்தது என அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் திறந்த வெளி சிறையில் இருக்கும் நிலத்தில் எவ்வித இரசாயனங்களையும் பயன்படுத்தாது பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 5 ஏக்கர் வயல் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரி கைது
மொனராகலை சிறைச்சாலையின் புனர்வாழ்வு அதிகாரி 7 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று மதியம் சிறிகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரச புலனாய்வு சேவையின் பிரதேச அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சியம்பலாண்டுவ, அம்பாறை சந்தி பகுதியில் வசிக்கும் 43 வயதான அதிகாரியை தாம் கைது செய்துள்ளதாக மொனராகலை பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பின் பல வீதிகளுக்கு இன்று முதல் பூட்டு
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதியின் நிலத்தடி குழாய்களை பதிக்கும் மூன்று கட்ட பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முதல் மார்ச் 11 வரை பல வீதிகள் மூன்று கட்டமாக தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 667 பேர் கைது
நாடு தழுவிய 'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 191 கிரோம் ஹெரோயின், 103 கிராம் ஐஸ் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கந்தக்காடு சம்பவம்; 34 கைதிகள் கைது, எட்டுப் பேர் காயம்
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் 34 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பீதியை ஏற்படுத்திய ஆவா குழு தலைவர் கொழும்பில் கைது
யாழ்ப்பாணத்தில் பீதியை ஏற்படுத்தி கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு,கப்பம் பெறும் குழுவாக இயங்கி வந்த ஆவா குழுவின் தலைவர் எனக்கூறப்படும் பிரபா என்பவர்,துபாய் நாட்டுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் இரத்மலானை யஷோரபுரவில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், வலான மத்திய மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சுதந்திர தினம் என்பதால்,பொலிஸார் தேடுதலில் ஈடுபட மாட்டார்கள் என்ற தைரியத்தில் இந்த நபர் வீட்டில் தங்கியிருந்தாக கூறப்படுகிறது.
கற்பிட்டியில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் - கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டியில் பணித்த ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 67 வயதுடைய கற்பிட்டி மண்டலக்குடாப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு
இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாத்தறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறைகள், பொதுமக்கள் மீதான வரிச்சுமை மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பவற்றிற்கு எதிராக மாத்தறை பிரதேசத்தில் பெண்கள் குழுவொன்று இந்த ஆர்ப்பட்டத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது
எம்பிலிப்பிட்டிய நகரில் இருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் இடிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரக்குற்றிகளை ஏற்றிச்செல்லும் லொறி ஒன்று குறித்த பாலத்தின் ஊடாக பயணித்த நிலையிலே பாலம் உடைந்து விழுந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கட்சியின் பிரச்சாரச் செயலாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள எந்தவொரு வேட்பாளருக்கோ, அரசாங்கத்துக்கோ ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
குறைந்த வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேக வரம்பை விட குறைவான வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் வாகன விபத்துகளுக்கு குறைந்த வேகத்தில் வாகனம் செலுத்துவது முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பெலியத்த கொலை சம்பவம் - மற்றுமொரு சந்தேக நபர் கைது
பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஐந்து பேரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து 28 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பெலியத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாண் நிறை குறித்த சோதனை நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்
குறிப்பிட்ட நிறையில் பாண் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதனை கண்டறியும் வகையில் சோதனைய நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பாண் உற்பத்தியாளர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்களினால் சோதனைகளை முன்னெடுக்கப்படவுள்ளது
அனுர மற்றும் பலர் இந்தியாவுக்கு விஜயம்
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் இன்று (05) இந்தியா செல்கின்றனர். இதன்படி, கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்தியா சென்று கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளனர்.