ஜெய்சங்கரை சந்தித்த அனுர: ஜேவிபியுடன் உறவை உறுதிப்படுத்தும் டில்லி

OruvanOruvan

Anura Kumara Dissanayake and Jaishankar

2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மிகவும் பேசப்படும் அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக அனுரகுமார திஸாநாயக்க அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் (Institute for Health Policy) அண்மையில் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இந்த வருடம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க மிகவும் விருப்பத்துக்குரிய வேட்பாளராக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, அனுரவுக்கு ஆதரவாக 50 வீதமானோர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 33 வீதமானவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்துள்ளனர். அதேநேரம் 9 வீதமானவர்கள் மாத்திரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை இந்த ஆய்வின் முடிவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த பின்னணியில், இலங்கையின் இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தக் குழு இன்று (05) இந்தியா - டில்லி சென்றுள்ளது. இந்த பயணத்தில் அனுரகுமார திசாநாயக்கவுடன், கலாநிதி நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இணைந்துள்ளனர்.

1980களின் பிற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை - இந்திய ஒப்பந்தம் மற்றும் இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வரலாறுகளையும் இந்திய ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இருப்பினும், இந்தியா மீதான நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் குறிப்பிடத்தக்க மாற்றத்தின் பின்னர் அதாவது சுமார் நன்கு தசாப்தங்களைக் கடந்து இந்த அழைப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ அழைப்பு வருவது இதுவே முதன் முறையாகும்.

இந்த நிலையில், அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் புதுடில்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களுக்குச் செல்ல உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விவசாயம் மற்றும் தொழிற்துறையில் சிறந்து விளங்கும் பகுதிகளை பார்வையிடுவதுடன், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினரை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, அனுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து தமது உத்தோயோகப்பூர்வ x கணக்கில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இந்தியா செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மைய நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையினை தொடர்ந்தும் கடை பிடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருதரப்பு உறவுகள் மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்தும், இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.