யாழ்ப்பாணத்தில் தொடரும் கைது நடவடிக்கைகள்: கொல்ல முயற்சி செய்ததாக பல்கலைக்கழக மாணவன் ஆணைக்குழுவில் முறைப்பாடு

OruvanOruvan

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையொன்றில் பொலிஸார் தன்னை பெரும் சித்திரவதைக்குட்படுத்தியதாக யாழ்.பல்கலைக்கழக மாணவன் கருணாகரன் நிதர்சன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில்,

“வட்டுக்கோட்டை மாவடி பகுதியிலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர், தான் மோட்டார் சைக்கிளில் வரும்போது தன்னை வழிமறித்து ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என என்னோடு முரண்பட்டார்.

அதற்கு நான் நீங்கள் வண்டியை மறித்ததை நான் கவனிக்கவில்லை என கூறி, என்னிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்து காட்டினேன்.

ஆனால், அதனை வாங்கவில்லை. அதன்பின்னர் சிவில் உடையில் வந்த ஏழிற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல் வீதியில் வைத்து கடுமையாக தாக்கினார்கள்.

இது பக்கத்தில் இருந்த கடையின் கண்காணிப்பு கமராக்களிலும் பதிவாகியுள்ளது. மேலும் என் கைப்பேசியிலும் தாக்குவதை காணொளியாக எடுத்துக்கொண்டேன்.

என் கைபேசியின் இரகசிய குறியீட்டை கேட்டபோது, நான் கொடுக்க மறுத்ததால் என்னை தலைகீழாக தூக்கி கடுமையாக தாக்கினர்.மேலும் என் ஆணுறுப்பை குறிவைத்தும் கடுமையாக தாக்கினர். இதனால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வியர்த்துக் கொட்டியது.

அதன் பின்னர் என்னை இரகசிய அறையிலிருந்து வெளியில் அழைத்து வந்து கதிரையில் அமரச் செய்தார்கள். எவ்வித குற்றமும் செய்யாத என்னை சிவில் உடை அணிந்த பொலிஸார், சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.

இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளேன்” என தெரிவித்தார்.

இதேவேளை, நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கடுமையான தாக்குதலினால் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

மேலும் கடந்த வாரம் சுன்னாகம் பொலிஸாரினால் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் கைதான இளைஞரை பொலிஸார் கடுமையாக தாக்கியதில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் உயிருக்கு ஆபத்திருப்பதாக தெரிவித்து மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.