உலக புற்றுநோய் தினம்: ஒன்றாக இணைந்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சவால் விடுப்போம்
நம்மையெல்லாம் உலுக்கிப் போட்ட அண்மைய சம்பவம் இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளருமான பவதாரணியின் மரணம்.
ஏனைய நோய்களைப்போல் இன்றி புற்றுநோய் மனித வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து புற்றுநோய் குறித்த பேச்சு சாதாரண மக்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பிடத்திலும் எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் 70 வீத இறப்பிற்கு புற்றுநோய் மிக முக்கிய காரணமாகின்றது. புற்றுநோய் குறித்து முன்கூட்டியே கண்டறிவது முறையான சிகிச்சை அளிப்பதற்கும் உயிராபத்தை தடுப்பதற்கும் உதவிபுரியும்.
இந்த நிலையிலே, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 'ஒன்றாக இணைந்து, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சவால் விடுகிறோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கையில் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட புற்றுநோயாளர்கள் பதிவு
இலங்கையில் நாளாந்தம் 106 புற்றுநோயாளர்கள் புதிதாக கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களுக்கு அமைய நாட்டில் வருடமொன்றில் 37,753 புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குழந்தைப் புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு
ஒரு வருடத்தில் பதிவாகும் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 450 ஆக காணப்பட்ட நிலையில், தற்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
புற்றுநோய் அதிகரிக்க காரணம்
கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு அடிமையாவதன் காரணமாக உடல் உழைப்பு இன்மையே புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர்களிடையே இரத்தப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய் போன்ற நோய்கள் வெகுவாக அதிகரித்துள்ள எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக புற்றுநோயில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு இனிப்பு பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை தவிர்ப்பது அவசியமாகும்.
அத்துடன், குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் தாய்ப்பால் கொடுப்பது புற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கு சிறந்த வழி எனவும் குழந்தைகள் நல வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.