சுதந்திர தின நிகழ்வில் அமெரிக்க, இந்திய தூதுவர்கள் பங்குபற்றவில்லை,காரணம் கூற மறுப்பு: புவிசார் அரசியல் நலன் நோக்கில் ஈழத் தமிழர் விவகாரத்தை ஏற்க மறுக்கும் சர்வதேசம்

OruvanOruvan

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கொழும்பிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூவர்களும் இந்திய தூதுவரும் பங்குபற்றவில்லை. இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அழைப்பு விடுக்கப்பட்டும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.

இது தொடர்பாக எமது அலுவலக செய்தியாளர் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டார். வெளிநாட்டு தூதுவர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதை செயலக அதிகாரி உறுதிப்படுத்தினார்.

ஆனால் இதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டதாகவும் அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்று தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சுடன் தொடர்புக்கொண்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் சுதந்திர தின நிகழ்வுக்கு கொழும்பிலுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் அழைக்கப்படுகின்றமை மரபாகும். ஆனால் இம்முறை தூதுவர்கள் பங்குபற்றவில்லை.

சுதந்திர தின நிகழ்வுக்கு சீன சார்புடைய தாய்லாந்து பிரதமர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டமையே அமெரிக்க, இந்திய தூதுவர்கள் பங்குபற்றாமைக்கான காரணம் என கொழும்பு உயர் மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு 4 பில்லியன் வரை நிதி உதவி வழங்கிய இந்தியா மேலும் பல உதவிகளை வழங்குவதற்கும், இலங்கையில் பொருளாதார அபிவிருத்திக்குரிய முதலீடுகளையும் வழங்கிவரும் நிலையில் சீன சார்பு போக்கை இலங்கை வெளிப்படுத்தி வருகின்றது.

ஆனாலும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளிலும், கொழும்பிலும் இந்திய முதலீடுகளுக்கு இலங்கை இணக்கம் தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே பல இந்திய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறையிலும் உள்ளன.

இருந்தாலும் சீன சார்பு போக்கை இலங்கை அதிகமாக வெளிப்படுத்தி வருகின்றது.

சீன சார்புடைய மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இயங்கி வருகின்றது.

இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க சீன சார்பு போக்கை பின்பற்றுகிறாரா அல்லது அமெரிக்க, இந்திய அரசுகளிடமிருந்து மேலும் நிதி உதவிகளையும் முதலீடுகளையும் பெறும் நோக்கில் கையாளப்படும் மூலோபாயமா என்றும் கேள்விகள் எழாமல் இல்லை.

சுதந்திர தின நிகழ்வில் இந்திய தூதுவர் பங்குபற்றாமல் விட்டாலும் வடக்கு கிழக்கில் மேலும் பல இந்திய திட்டங்களுக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கும் என்றும் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும், வடமாகாணத்தில் தலைமன்னார் பிரதேசத்திற்கும் இடையேயான கடற்பிரதேசத்தில் சுமார் 32 கிலோமீற்றர் நீளமான பாலத்தை அமைப்பதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் இந்தியா விரைவில் திட்டத்தை ஆரம்பிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படாத நிலையில் இந்திய மத்திய அரசு புவிசார் அரசியல் நலன் நோக்கில் இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அதிகார பரவலாக்கத்திற்கான 13 ஆவது திருத்தச்சட்டத்தை தீர்வுக்காண ஆரம்ப புள்ளியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா இலங்கையிடம் கேட்டுக்கொண்டபோதும் சிங்கள அரசியல் தலைவர்கள் எரும் இணங்கவே இல்லை.

இப்பிண்ணனியில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவை புறக்கணிக்கும் செயற்பாடுகளில் காலங்காலமாக சிங்கள அரசியல் தலைவர்கள் செயற்பட்டாலும் கூட இந்திய நலன்கள் விடயத்தில் விரும்பியோ விரும்பாமலோ இலங்கை விட்டுக்கொடுக்கும் நிலையும் பகிரங்கமாக தெரிகின்றது.

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளிலும் புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்கான காரண-காரியம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு புரியாததல்ல.

ஆனால் புவிசார் அரசியல் நலன் நோக்கில் ஏற்க மறுக்கின்றன.