கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம்: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்

OruvanOruvan

Daily news in 40 words

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிப்பாய் ஒருவர் உட்பட பல கைதிகள் காயமடைந்துள்ளனர்.

வெளிநாடு தப்பிச் செல்லவிருந்த ஆவா குழுவின் தலைவர் கொழும்பில் கைது

யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவன் வெளிநாடு தப்பிச் செல்ல தயாராக இருந்த நிலையில், கொழும்பு - கல்கிசை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடைமுறைக்கு வரும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் வைக்கும் வேலைத்திட்டம்-

சிவில் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் வீட்டுக்காவலில் வைக்கும் வேலைத்திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரங்கள் தொடர்பான ராஜாங்க அமைச்சர் அனுருத்த ஜயரத்ன தெரிவித்துள்ளார்.சிறைச்சாலைகளில் காணப்படும் இடநெரிசலை குறைக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் சம்பந்தமான சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு வழங்கிய அறிக்கைக்கு அமைய சட்ட வரைவு பிரிவினர் சட்டத்தை தயாரித்து வருகின்றனர். அந்த பணி முடிந்த பின்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தில் 1450 பேருக்கு பதவி உயர்வு

76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 211 அதிகாரிகளும், 1,239 இதர நிலைகளும் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இரண்டு பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல்கள், 12 கேணல்கள், 13 லெப்டினன் கேணல்கள் உள்ளிட்ட பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

கொள்ளுப்பிட்டி, கொம்பனிவீதியின் பல வீதிகள் தற்காலிகமாக மூடல்

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகள் நாளை முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளன. உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகியன மூன்று கட்டங்களாக மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன என்று உயர்மட்ட அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்ற திருத்தங்களை புறக்கணித்து சான்றுரை படுத்தியுள்ளார்.எனவே அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணாக சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சினைகளை பொன்சேகா கட்சிக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்-முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் என்ற வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,தனக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் அந்த பிரச்சினை கௌரவமான முறையில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள் கட்சிக்குள் இருக்கின்றது என்பதை அவர் புரிந்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கட்சியின் பாராளுமன்றக்குழு, செயற்குழு, முகாமைத்துவக்குழு போன்ற பல இடங்கள் பிரச்சினைகளை பற்றி பேச இருக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் பதவி விலகியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக சில வருடங்களாக கடமையாற்றி வந்த சுகீஷ்வர பண்டார அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். கோட்டாய ஜனாதிபதி பதவிக்கு வருதற்கு முன்பே அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றி சுகீஷ்வர பண்டார,நிமல் லன்சா உள்ளிட்டோர் ஆரம்பித்துள்ள புதிய கூட்டணியின் ஊடாக செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபடுவதற்காக பதவி விலகியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின் சந்திரிகாவை பிரதமராக நியமிக்கும் யோசனை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தலைமை வகிக்கும் புதிய அரசியல் கூட்டணி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அந்த பதவிக்கு தெரிவு செய்ய இந்த புதிய கூட்டணி அவருக்கு ஆதரவளிக்கும் எனக்கூறப்படுகிறது.அவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர்,அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் இருக்கும் ஒரே ஒரு ஆபிரிக்க யானை-சுற்றுலாப் பயணிகள் பார்வையிட சந்தர்ப்பம்

இலங்கையில் எஞ்சி இருக்கும் ஒரே ஒரு ஆபிரிக்க யானை பார்வையிட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என ஹம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆபிரிக்க யானை மற்றும் சஃபாரி பூங்காவில் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்ட நிலையில்,தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள கண்டுல, கலன ஆகிய யானைகளையும் அடுத்த வாரத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தலைமன்னாரில் இருந்த தங்கத்தை கடத்தியவர் இந்தியாவில் கைது

தலைமன்னாரில் இருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லபட்ட 15 கோடி ரூபா பெறுமதியான 4.634 கிலோ கிராம் தங்க கட்டிகளுடன் மன்னாரை சொந்த இடமாக கொண்ட தற்போது இந்தியாவின் இராமநாதபுரத்தில் தற்காலிகமாக வசித்து வரும் நபரை திருச்சி சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர், தலைமன்னாரில் இருந்து தனியாக ஓட்டிச் சென்ற படகில் இந்த தங்கத்தை கடத்திச் சென்றுள்ளதாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உளுக்குளம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டெக்கப்பட்டுள்ளது

அலையாபத்து பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் இருந்து நேற்று (03) சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அடையாளம் காணமுடியாதளவு சடலம் சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்போருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - எதிர்க்கட்சித் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் தீர்மானங்களை விமர்சிக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அந்தஸ்து பாராமல் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கட்சியில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பது குறித்து தமக்கு புரிந்துணர்வு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் “சுதந்திர தினம்“-வடக்கு கிழக்கில் கரிநாளாக பிரகடனம்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகியுள்ளன.'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.இந்நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்துள்ளனர். புலம்பெயர் தமிழர்களும் கரிநாள் என்றே பிரகடனப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் ரொஷான் ரணசிங்க

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதிரடியாக அறிவித்துள்ளார்.ரொஷான் ரணசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பல்வேறு ஊகங்கள் தெரிவித்திருந்த நிலையில், தனியார் ஊடகமொன்று வழங்கிய செவ்வியிலேயே அதனை உறுதி செய்துள்ளார்.

இன்றைய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தயாசிறி ஜயசேகரவின் இன்னுமொரு பதவி பறிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவர் பதவியில் இருந்தும் தயாசிறி நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐ.தே.க.வின் தேர்தல் குழு நியமனம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழு ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவின் தலைமையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கு உதவத் தயாராகும் ஐ.ம.ச

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கு ஐக்கிய மக்கள் சக்தி உதவிகளை வழங்கும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தேவையான சட்ட உதவிகள் , அதற்கான ஏற்பாடுகளை பெற்றுக் கொடுக்க நாம் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.