இலங்கை அரசின் கோர முகம் வெளிப்பட்டுவிட்டது: கிளிநொச்சியில் பெண்களை தூக்கி வீசிய பொலிஸார், பலர் அடித்து துன்புறுத்தல்

OruvanOruvan

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மோசமாகவும், மிலேச்சத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் காட்டுமிராண்டித் தனமாக பொலிஸார் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பேரணியை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பேரணி வந்த சாலையை மறித்து தடைகளை பொலிஸார் ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனை மீறி செல்ல முற்பட்ட போது பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு பேரணிணை கலைத்ததுடன், பல்கலைக்கழக மாணவர்களையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊடகங்களுக்கு சிறீதரன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில்,

“வரலாறு மீண்டும் ஒரு முறைய பொலிஸாரின் அராஜகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. பல மாணவர்கள் காவிச் செல்லப்பட்டனர்.

பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். தூக்கி வீச்சப்பட்டனர். பலர் அடித்து துன்புறுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்பதில் போராட்டகாரர்கள் உறுதியாக இருந்தனர். மாணவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இன்றைய சம்பவம் இலங்கை அரசின் கோர முகத்தை சர்வதேச சமூகத்திற்கு காட்டியுள்ளது. இலங்கையின் தேசியக் கொடி இன்னும் தமிழர்களை அரவணைக்கவில்லை.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட வேளை பொலிஸார் ஒருவர் என் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதற்கான காணொளி ஆதாரங்கள் இருக்கின்றன. எதிர்வரும் நாட்களில் அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று கூறியிருந்தார்.