'அன்று அலுவலகம் புகுந்து தாக்குதல், இன்று எதிராக குரல்': சவப் பெட்டியுடன் மயானத்திற்கு வந்த மேர்வின் சில்வா

OruvanOruvan

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.

குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எதிர்த்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆட்சேபனைக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேர்வின் சில்வா மற்றும் மைத்திரி குணரத்ன உள்ளிட்டோர் சவப்பெட்டியை சுமந்து கொண்டு மயானத்திற்கு வந்ததுடன், அங்கு முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.

அங்கு கருத்து வௌியிட்ட மேர்வின் சில்வா,

'சுதந்திரம் என்பதை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமே அனுபவிக்கின்றனர். அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் பொதுமக்களுக்கு சுதந்திரம் இல்லை.

இந்தப் பெட்டியை சுமந்து வந்து நாங்கள் சுதந்திரத்தை தகனம் செய்துள்ளோம். உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதாயின் இந்தக் கும்பலை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் சூளுரைத்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஊடகங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்ற வலுவான கருத்தைக் கொண்டிருந்த மேர்வினுக்கு இன்று ஊடகச் சுந்திரம் குறித்து பேசியமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேர்வின் சில்வா, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட்டிருந்தார்.

சுமார் 17 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2007ஆம் ஆண்டு குண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழுவுடன் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்து அதன் ஊழியர்களை தாக்கினார்.

தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு செய்தியால் ஆத்திரமடைந்த மேர்வின் சில்வா, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இலங்கையின் தனியார் ஊடகம் ஒன்று அவருக்கு எதிராக செய்தி வெளியிட்டமையால் அதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளிதழில் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் மேர்வின் சில்வா அதன் அலுவலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்.