உலகின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு: விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

OruvanOruvan

உலகின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதியாகக் குறைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

40 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறக்குறைய 1,700 நீர்நிலைகளை ஆராய்ந்தபோது கடந்த 2000ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட பாதியளவுக்கு நீர்மட்டம் இறங்கியது கண்டறியப்பட்டது.

இந்த நீர்நிலைகளில் 7 விழுக்காடு வண்டல் செறிவுடனான நிலத்தடி நீராக இருப்பதால் அவற்றில் மட்டும் இதே காலகட்டத்தில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

உலகின் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பான விவரங்களைத் திரட்டவும் கிணறுகளைக் கண்காணித்து தரவு சேகரிக்கவும் இந்தப் புதிய ஆய்வு நடத்தப்பட்டது.

வறண்ட பருவநிலை உள்ள பகுதிகளிலும் விவசாயத்திற்கு அதிக நிலங்களைப் பயன்படுத்தும் வட்டாரங்களிலும் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

அமெரிக்காவின் ஹை பிளைன்ஸ் வட்டாரத்திலும் கலிஃபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கிலும் இத்தகைய நிலை காணப்படுகிறது.

அத்துடன், ஈரானில் அதிகமான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

நீர்மட்டம் இறங்குவது முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வை முன்னின்று நடத்திய ஸ்காட் ஜேசெக்கோ என்பவர் கூறினார்.

கஃலிபோர்னியாவில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றின் துணைப் பேராசிரியர் அவர்.

“நிலத்தடி நீர்மட்டம் இறங்குவதால் நீரோடைகள் நிலைதடுமாறும், நிலப்பகுதிகள் இறங்கி மூழ்கும், கடலோர நீர்நிலைகளை கடல்நீர் மாசுபடுத்தும், கிணறுகள் வற்றிப்போகும்,” என்று அவர் விவரித்தார்.

நிலத்தடி நீர்மட்டம் இறங்குவதற்கு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டன. பெரிய நகரங்களில் உள்ள வீடுகள் நிலத்தடி நீரைச் சார்ந்து உள்ளன.

அதேநேரம் புறநகர்ப் பகுதிகளில் விவசாயப் பாசனத்திற்கு நிலத்தடி நீர் தேவைப்படுகிறது. பெரும்பாலான நிலத்தடி நீர் அந்தப் பகுதிகளில்தான் செலவாகிறது.

ஆய்வு முடிவுகள் ‘நேச்சர்’ (Nature) சஞ்சிகையில் இவ்வாண்டு ஜனவரி 24ஆம் திகதி வெளியிடப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் பரவலாகக் குறைந்து வருவதாக இதற்கு முன்னர் செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.