ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான நகர்வா?: ஆளுங்கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர் கூறுவதென்ன?

OruvanOruvan

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முற்பட்டால் அது ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.”

இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன எச்சரித்துள்ளார்.

“மாகாணசபைகளுக்கு தற்போது அதிகாரம் இல்லை, உள்ளாட்சிசபைகளுக்கும் அதிகாரம் இல்லை, ஏனெனில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை.

தற்போது பிரதமர் ஆட்சிமுறை பற்றி பேசப்படுகின்றது, இது ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான நகர்வா இது என்ற ஐயமும் ஏற்படுகின்றது.

அதேபோல பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்துக்கொண்டு ஆட்சியை தொடர்வதற்கான திட்டமும் இதன் பின்னணியில் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

செப்டம்பர், ஒக்டோபருக்கிடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டியுள்ள நிலையில், ஜனாதிபதி முறைமையை நீக்குவது பற்றி யோசனைகள் முன்வைக்கப்படுகின்றது.

இது, தேர்தலை இழுத்தடிப்பதற்கான நகர்வாகவே அமைந்துள்ளதுடன் பயங்கரமான நிலைமையை நாட்டில் ஏற்படுத்தக்கூடும்.

நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்பட்ட பின்னரே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மறுசீரமைப்பு பற்றி சிந்திக்க வேண்டும்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை வைத்துக்கொண்டு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முற்பட்டால் ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.

எனவே, தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சன்ன ஜயசுமன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் முக்கிய அமைச்சராக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.