உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே கையொப்பமிடப்பட்டது: பாராளுமன்ற செயலாளர் விளக்கம், எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் முறையான நடைமுறைகளை பின்பற்றியே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் நேற்று கையெழுத்திட்டார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியதையடுத்தே சபாநாயகர் அதில் கையொப்பமிட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குழுநிலை கலந்துரையாடலின் போது உச்ச நீதிமன்றம் மசோதாவில் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
3, 5, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 37, 42, 45, 53 ஆகிய பிரிவுகளை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
எனினும், சட்டமூலத்தின் 56வது சட்டப்பிரிவை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
ஆயினும் இந்த மசோதா பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது