அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்துள்ளது: பெரும்பான்மையான உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்

OruvanOruvan

Constitutional Council

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருந்த பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்துள்ளது.

இந்த நிராகரிப்புக்கான காரணத்தை தெரிவித்து, அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக பாராளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் பரிந்துரையை ஜனாதிபதி, கடந்த வாரம் அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி இருந்தார்.

ஜனாதிபதியின் இந்த பரிந்துரையை ஆராய அரசியலமைப்புப் பேரவை கடந்த 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.

இதன் போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஆகியோர் ஜனாதிபதி பரிந்துரைக்கு அனுமதி வழங்கினர். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்துள்ளனர்.

இதற்கு முன்னர் தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பி இருந்த பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.